(Source: ECI/ABP News/ABP Majha)
Crowd Seeking Remdesivir : ரெம்டெசிவிர் மருந்து வாங்க திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை என சுகாதாரத்துறை அறிவுறுத்தல் கொடுத்தாலும் அந்த அறிவுறுத்தல்கள் முழுமையாக இன்னும் மக்களிடையே சென்று சேரவில்லை. அதோடு, தனியார் மருத்துவர்களும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைப்பதால், ரெம்டெசிவிர் தான் கொரோனாவிற்கான மருந்து என எண்ணி உறவினர்கள் அந்த மருந்தை வாங்க மருத்துவமனைகளில் கால் கடுக்க இரவு பகல் பாராது நிற்க வேண்டிய நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது
ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து அல்ல என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தினாலும், அந்த அறிவுறுத்தல் முழுமையாக மக்களிடையே சென்று சேராததால், ரெம்டெசிவிர் ஊசி போட்டால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் பிழைத்துக் கொள்வார் என்று நினைத்தும், கொரோனாவிற்கான மருந்தே ரெம்டெசிவிர்தான் என எண்ணியும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் என மாவட்ட தலைநகரங்களில் காலையில் இருந்து இரவு முதல் கால்கடுக்க நின்று வருகிறார்கள்.
தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் ரெம்டெசிவிர் வாங்கி வரவேண்டும் என்று மருந்து சீட்டை எழுதிக்கொடுப்பதால் இது உயிர் காக்கும் மருந்தா அல்லது இல்லையா என்ற குழப்பத்திலேயே பலர் இந்த மருந்தை தேடி அலைந்து வருகின்றனர்.
திருச்சியை பொறுத்தவரை பெரியமிளகுப்பாறையில் உள்ள அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியில் கடந்த சனிக்கிழமைதான் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கத் தொடங்கினார். முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை மாலை வந்த பலரை அடுத்த நாள் வரச்சொல்லி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட திருச்சியை சுற்றி இருக்கக் கூடிய மாவட்ட மக்கள் இந்த மருந்தை பெற குவியத் தொடங்கினர். ஆனால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மருந்து விற்பனை செய்யப்படவில்லை. இதனால் பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வந்த அனைவரும் கடும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், திங்கள் கிழமை முதல் ஒரு நாளைக்கு 50 பேருக்கு டோக்கன் மூலம் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மருந்தை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் காலையிலேயே வரிசையில் வந்து நின்று வருகின்றனர். இன்றும் கூட 50 நபர்களுக்கான டோக்கன் விநியோகம் முடிந்தாலும், நாளை மருந்தை வாங்குவதற்காக காலை முதலே பெரியமிளகுப்பாறை பகுதியில் நோயாளிகளின் உறவினர்கள் கால் கடுக்க காத்துக் கிடக்க தொடங்கியிருக்கின்றனர்.
இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வரும் நிலையில், திருச்சியில் முழுக்க முழுக்க மருத்துவத் துறை இல்லாத, வருவாய் துறையை சேர்ந்த ஊழியர்களே மருந்தை விநியோகம் செய்து வருகின்றனர். அதேபோல், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளுக்கு நேற்று முன் தினம் முதல் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அரசு மருத்துவமனைகளில் எல்லாம் முதுநிலை பயிற்சி மாணவர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறார்கள். 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கும் மருத்துவமனைகளில் ஒரு ஷிப்டுக்கு 10 பேர் வீதம் 4 ஷிப்டுகளாக பயிற்சி மாணவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே எழுதிக்கொடுக்க வேண்டும், அரசு இதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பித்தும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இல்லாமல் தொடர்ந்து மருந்து வழங்க உத்தரவிடவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.