கட்டுப்பாடுகளை கடுமையாக்குக - தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம்..
கொரோனா தொற்று அதிகரித்துவருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸானது தற்போது 100-க்கும்மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இதனையடுத்து ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோ மற்றும் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 781-ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 961ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 263 பேரும், மகாராஷ்டிராவில் 252 பேரும், தமிழ்நாட்டில் 45 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பக்கம் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துக்கொண்டிருக்க . இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதனால் மத்திய அரசு தரப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் 1,088 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் டிசம்பர் நான்காவது வாரத்தி அது 1,720ஆக உயர்ந்திருக்கிறது.
இதனால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் பணியையும் அதிகரிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: நாளை இரவு வாகனத்தில் போகலாமா... வேண்டாமா? கூடாது என்கிறது போலீஸ்; போகலாம் என்கிறார் அமைச்சர்... தீருமா குழப்பம்!