Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: காற்று மாசுபாட்டை தவிர்க்கும் விதமாக, டெல்லியில் இன்று முதல் பழைய கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Delhi Air Pollution: காற்று மாசுபாட்டை தவிர்க்கும் விதமாக, டெல்லியில் இன்று முதல் மாசுகட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் புதிய விதிகள்:
டெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தால், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளை அறிந்திருக்க வேண்டியது அவசியம். காரணம் விதிகலுக்கு இணங்காத வாகனங்கள் மீதான கட்டுப்பாடுகளை டெல்லி அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது. அண்மைக்கால உமிழ்வு தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வாகனங்களுக்கு மட்டுமே நகருக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகர எல்லைகளில் கடுமையான சோதனைகள், பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை முழுமையாக நிறுத்துதல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். தேசிய தலைநகரம் முழுவதும் புதிய நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளைப் பயன்படுத்தும் பயணிகளும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
வாகனங்களுக்கான புதிய விதிகள் என்ன?
- சமீபத்திய மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் BS-VI இணக்கமான வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.
- BS-II, BS-III மற்றும் BS-IV வாகனங்கள் தேசிய தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியில் ஏற்கனவே இயங்கும் வெளியூர் வாகனங்களும் அமலாக்கக் குழுக்களால் சோதனை செய்யப்படும்.
- பரிந்துரைக்கப்பட்ட மாசு உமிழ்வு தரநிலைகளுக்குக் கீழே காணப்படும் வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.
எரிபொருள், போக்குவரத்து & கட்டுமானத் தடைகள்
- சான்றிதழ் இல்லாவிட்டால் எரிபொருள் இல்லை: பெட்ரோல் பம்புகள் டிஜிட்டல் கண்காணிப்பில் உள்ளன, மேலும் செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படமாட்டாது
- பல பேருந்துகள் இன்னும் BS-IV டீசல் இன்ஜின்களில் இயக்கப்படுவதால், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து பயணிகள் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
- தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள்
- சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கு தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- BS-VI உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும்.
உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கையில், பழைய வாகனங்களால் உருவாகும் உமிழ்வை ஆய்வு செய்ததாகவும், தற்போதைய BS-VI விதிமுறைகளுக்கு இணங்கும் வாகனங்களை விட அவை கணிசமாக அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வாகனங்களைத் தொடர்ந்து இயக்குவது பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக ஆணையம் எச்சரித்து. இதனால் BS-VI விதிகளுக்கு இணங்காத வாகனங்களுக்கு நீதிமன்றம் வழங்கிய முந்தைய பாதுகாப்பை திரும்பப் பெற்றது.
டெல்லியை முடக்கும் காற்று மாசு
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதோடு, கடுமையான மூடுபனியும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை அணுக வேண்டிய சூழலுக்கும், அரசு பணியாளர்களில் பாதி பேர் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். காற்று மாசுபாட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில் தான், போக்குவரத்து மற்றும் கட்டுமானம் போன்ற காற்று மாசுவிற்கு வழிவகுக்கக் கூடிய பணிகளுக்கு டெல்லி அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.





















