பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
கட்சி விரோத செயல்பாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காரணத்தால் பாமகவில் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கக் கோரி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்

பாமகவில் அதிகார மோதல்
பாமகவில் ராமதாஸ், அன்புமணிக்கு இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக பாமக இரண்டு பிளவாக பிரிந்து உள்ளது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக மூத்த தலைவரான ஜி.கே.மணி உள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு, தேர்தல் ஆணையத்தில் முறையீடு, அன்புமணிக்கு எதிராக பேட்டி என தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக அடிப்படை உறுப்பினரிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் அளிக்க கோரி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கட்சி நலனுக்கு எதிரான செயல்பாடு
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக அவர் மீது கட்சியின் அமைப்பு விதி 30இன்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் நேற்று (17.12.2025) புதன் கிழமை கூடி விவாதித்தது. அப்போது ஜி.கே.மணி அவர்களின் கீழ்க்கண்ட இரு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த திசம்பர் 6ஆம் தேதி தில்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தது மற்றும் நேர்காணல் அளித்தது.
2. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் கடந்த திசம்பர் 15&ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தது.
மேற்கண்ட இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.





















