இவ்வளவு நாள் ஆலோசித்தார்களா? - பிற மாநிலங்களுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் குறித்து உதயநிதி..
Coronavirus Pandemic : தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 45 மெட்ரிக் டன் அளவு அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப மைய அரசு முடிவெடுத்துள்ளது
மாநில அரசை ஆலோசிக்காமல் உற்பத்தியாகும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில், " தமிழகத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா- தெலுங்கானாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. இதுபற்றி எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் வேறு கொடுக்கிறார். இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் எதையும் செய்தார்களா என்ன?
’மாநிலத்தில் அரசு என ஒன்று இருக்கிறது; அதனுடன் கலந்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டும்’ என்ற சிந்தனையே மத்திய அரசுக்கு இல்லாமல் போனதற்கு அடிமைகளின் கையாலாகாத்தனமே காரணம். ஊழல் வழக்குகளில் தப்பிப்பதற்காக ஆரம்பம் முதலே மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்ததன் விளைவே இது.
அண்டை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளபோது, இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசும் அவர்களது அடிமைகளும் செய்யும் துரோகம்-புறக்கணிப்பு " என்று தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டரில், " தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 45 மெட்ரிக் டன் அளவு
அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப மைய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்திற்குப் போதிய ஆக்சிஜன் இல்லை என்கிற சூழலில் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்போக்கை விசிக வன்மையாகக்_கண்டிக்கிறது " என்று பதிவிட்டார்.
தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் #ஆக்சிஜன்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 21, 2021
45 மெட்ரிக் டன் அளவு
அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப மைய அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழகத்திற்குப் போதிய ஆக்சிஜன் இல்லை என்கிற சூழலில் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்போக்கை விசிக #வன்மையாகக்_கண்டிக்கிறது. pic.twitter.com/9nVMIOy9K8
முன்னதாக, சென்னையின் ஸ்ரீபெரும்புதூரில் தயாராகும் திரவ ஆக்ஸிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு திருப்பிவிட மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டது. தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றின் அளவு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் சென்னை ஸ்ரீபெரும்பதூரில் தயாராகும் சுமார் 45 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் பிற மாநிலங்களுக்கு (ஆந்திரா மற்றும் தெலுங்கானா) திருப்பிவிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவினை மத்திய சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நாளிதழ் ஒன்றில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், " தற்போதைய நிலையில் ஒரு நாளுக்கு சராசரியாக 200 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. அதே சமயம், தமிழகத்திற்கு ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் ஆக்ஸிஜனின் அளவு 200 மெட்ரிக் டன்னில் இருந்து 300 மெட்ரிக் டன்னாகவும். அதன் பிறகு ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 465 மெட்ரிக் டன்னாகவும் வழங்கவேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. இந்த அளவில் தான் பிற மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் பங்கீடு அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலம் முறையே தற்போது 320 மெட்ரிக் டன் அளவிற்கு தங்களுடைய பங்கினை பெற்றுவரும் நிலையில், தமிழகத்திற்கு மட்டும் இன்னும் 200 என்ற அளவிலேயே ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகின்றது " என்று தெரிவித்தார்.