DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளதா என, முதலமைச்சர் ஸ்டாலினை சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வினவியுள்ளார்.
DMK CPM: தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கை தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஎம் மாநில மாநாடு:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தான், திமுக கூட்டணியில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அண்மையில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது. அப்போது, அதிமுகவின் கேள்விக்கு ஆதரவளித்த, யார் அந்த சார்? என்பதை தமிழக காவல்துறை கூற வேண்டும் என, விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி இருந்தார். மறுபுறம், அரசு பள்ளிகளை தனியார் தத்தெடுப்பதாக வெளியான தகவலுக்கு, சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடும் கண்டனங்களை தெரிவித்தார். இத்தகைய சூழலில் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சியின் 3 நாள் மாநில மாநாடு விழுப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
”திராவிட மாடல்” - கே. பாலகிருஷ்ணன்
மாநாட்டின் முதல் நாளில் பேசிய கே. பாலகிருஷ்ணன், “திராவிட மாடல் திராவிட மாடல் என்கிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலே இருக்கிற மக்களுக்கு ஒரு மாற்று மாடல் என்று சொன்னால், அதில் இடதுசாரி மாடல் தான் சிறந்த மாடலாக இருக்க முடியும். பாஜகவை வீழ்த்துகின்ற போராட்டத்தில் திமுக உடன் இணைந்து நாங்கள் தயக்கமின்றி போராடுவோம். ஆனால், திமுக அரசு தொழிலாளிகளின் உரிமைகளை பறிக்கும்போது, விவசாயிகளின் உரிமைகளை பறிக்கும்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கொடுத்த உரிமைகளை நிறைவேற்ற தவறுகிறபோது மற்ற உழைப்பாளிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் கடத்துகிறபோது அந்த உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் நிச்சயமாக களம் காண்கிற போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்போம் என்பதை உறுதியளிக்கிறேன்.
”தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா?”
ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. மாண்புமிகு மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்” என கே. பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். கூட்டணிக்குள் இருந்துகொண்டே அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து அவர் தெரிவிக்கும் இந்த கருத்துகள் திமுகவினரை கொதிப்படைய செய்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.