Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
January 2025 Pongal Holidays in Tamilnadu: ஜனவரி 17 அன்றும் அரசு விடுமுறை அளிக்கும்பட்சத்தில் அடுத்து, ஜனவரி 18 சனிக்கிழமை, ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை என 9 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும்.
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறை அளிக்கப்படுமா என்று மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.
தென்னிந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் முதன்மையானது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில், ஜனவரி 14- பொங்கல், ஜனவரி 15- திருவள்ளுவர் தினம், ஜனவரி 16- உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
போகிக்கு அரசு விடுமுறை
முன்னதாக ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகை எனப்படும் காப்புக்கட்டு விழா கொண்டாடப்பட உள்ளது. போகி பண்டிகைக்கு தமிழக அரசு ஆண்டு விடுமுறை அறிவிக்காவிட்டாலும், தனிப்பட்ட வகையில் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த ஆண்டும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழக அரசு ஜனவரி 13ஆம் தேதி விடுமுறை அளித்தால், ஜனவரி 11 சனிக்கிழமை, ஜனவரி 12 ஞாயிற்றுக் கிழமை, 13 திங்கட்கிழமை (போகி விடுமுறை), பொங்கலுக்காக ஜனவரி 14, 15, 16 அரசு விடுமுறை என தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 17 அரசு விடுமுறை அறிவிக்கப்படுமா?
அதே நேரத்தில் ஜனவரி 17ஆம் தேதி மட்டுமே வேலை நாளாக இருக்கும். ஜனவரி 17 வெள்ளிக்கிழமை அன்றும் அரசு விடுமுறை அளிக்கும்பட்சத்தில் அடுத்து, ஜனவரி 18 சனிக்கிழமை, ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை என 9 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும்.
எனினும் ’ஜனவரி 17ஆம் தேதி அரசு அளித்த விடுமுறையை ஈடுகட்ட, அடுத்து வரும் ஒரு சனிக்கிழமை அன்று பள்ளியை செயல்பட வைக்கலாம். அரசு அலுவலகங்களும் இயங்கும் என்று அறிவிக்கலாம்’ என்று ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருச்சிக்கு 10 நாட்கள் விடுமுறை?
இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று வைகுண்ட ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில், ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய தினங்களில் விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில் தொடர்ந்து 10 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கும் என்று திருச்சி மாவட்ட அரசு ஊழியர்களும் மாணவர்களும் ஆனந்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.