TN Omicron Case: தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் தொற்றா? கண்காணிப்பில் நைஜீரியாவில் இருந்து வந்த பயணி!
நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த பயணிக்கு ஓமிக்ரான் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த பயணிக்கு ஓமிக்ரான் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நைஜீரியாவில் இருந்து வந்து அந்த நபர் மற்றும் அவரது உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய உதவும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் டேக்பாத் (TaqPath) கிட் பயன்படுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த கிட்டில் எஸ், என், ஓஆர்எஃப்1 என மூன்று ஜீன்களை கண்டறியலாம்.
அதில், பரிசோதனையின்போது ‘எஸ்’ ஜீன் மட்டும் தெரியாமல் இருந்தால், உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என கருத வேண்டும். அந்த மாதிரியை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
நைஜீரியாவில் இருந்து வந்த பயணியின் மாதிரியில் 'எஸ்' ஜீன் தெரியவில்லை. அதனால், அவருக்குக் ஓமிக்ரான் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 நாடுகளில் பாதிப்பு:
ஓமிக்ரான் திரிபு முதல் முதலாக தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை உலக சுகாதார நிறுவனத்துக்கு நவம்பர் 24ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவியது. இது மிகவும் வீரியமிக்கது என்றும் அதிவிரைவில் பரவக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காக, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 63க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் தொற்று பரவியுள்ளது. பிரிட்டனில் ஓமிக்ரானால் அடுத்த அலை ஏற்படலாம் என அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். அங்கு மக்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. உலகின் முதல் ஒமிக்ரான் உயிர்ப்பலியும் பிரிட்டனில் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் நேற்று இரவு நிலவரப்படி 42 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் முதல் ஓமிக்ரான் தொற்றாளராக நைஜீரியாவில் இருந்து திரும்பிய பயணி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஓமிக்ரான் அறிகுறிகள் என்ன?
ஓமிக்ரான் தொற்றால் பெரும்பாலும் உடல் நிலை சோர்வாக இருக்கும். அது உடல் வலி மற்றும் தலைவலியாக இருக்கும். பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான தலைவலி மற்றும் சோர்வு காணப்படும். வாசனையின்மை,சுவை இழப்பு, அல்லது கடுமையான காய்ச்சல் பற்றி யாரும் இதுவரை குறிப்பிடவில்லை. ஓமிக்ரான் தீவிர நோய் பாதிப்பு ஏற்படாது, இதனால் தடுப்பூசி ஆற்றலை எதிர்க்க முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இவை அனைத்துமே ஆரம்ப நிலை அறிவிப்புகள் தான். ஓமிக்ரானின் பாதிப்பை உறுதி செய்யும் இன்னும் சில காலம் ஆகலாம் என உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.