Pongal Kit : முதல்வர் ஆலோசனை : 15 டிசைன்களில் சேலை.. 5 டிசைன்களில் வேட்டி.. பொங்கல் பரிசு குறித்து அதிகாரிகள் தகவல்..
TN Govt Pongal Gift 2023: பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க முதல்வர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்க முதலமைச்சர் தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் சங்கரபாணி மற்றும் காந்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்களுடன் அதிகாரிகளும் கலந்து கொண்டு முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த திட்டம் தொடர்பாக, பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி டெண்டர் அறிவித்திருந்தது. அதில், 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்கும் இந்த புதிய டெண்டருக்கு செப்டம்பர் 9 ம் தேதி கடைசி நாள் என்றும், இதன் மூலம், சுமார் 1. 80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டிகள் மற்றும் சேலைகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். pic.twitter.com/SM5sttiiEr
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 19, 2022
பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளியோர், ஆதரவற்றவர்கள், முதியோர், விதவைகளுக்கு தமிழக அரசால் நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. வரும், 2023ம் ஆண்டுக்கான வேட்டி, சேலை உற்பத்திக்காக முதல் தவணையாக ரூ.243.96 கோடி தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2023ம் ஆண்டு 1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில்,பொங்கல் பண்டிகைக்கான வேட்டி சேலை திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டம் வாரியாக வேட்டி, சேலைகளை அனுப்புவது, திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்தும், விநியோகிக்கும் நடைமுறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், கைத்தறித்துறை செயலாளர், அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதிய டிசைன்களில் வேட்டி,சேலை
10 வருடங்களுக்கு பிறகு புதிய டிசைனில் அரசின் இலவச வேட்டி சேலை 2023 ஜனவரி 10 ம் தேதிக்குள் வழங்க திட்டம். சேலையில் 15 டிசைன்கள் மற்றும் பல நிறங்களில் சேலை, இதே போல 5 டிசைன்களில் ஆண்களுக்கான வேட்டி அனைவரும் விரும்பி அணியும் வகையில் தரத்துடன் இலவச வேட்டி சேலை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரித்த முதல்வர்
கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசு குறித்து பொதுமக்கள் மற்றும் எதிர் கட்சியினர் தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இம்முறை அப்படியான குற்றச்சாட்டுகளுக்கே இடம் அளிக்காத அளவிற்கு தரமான பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என முதல்வர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.