CM Stalin: சென்னை நவீனமாகும்; எல்லாருக்கும் எல்லாம் என்பதே வளர்ச்சி- முதலமைச்சர் ஸ்டாலின்
cm Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.4,181 கோடி மதிப்பிலான வட சென்னை வளர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை தொடக்கி வைத்தார்
வட சென்னைக்கு, ரூ. 4, 181 கோடி மதிப்புடைய திட்டப்பணிகளுக்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
”தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும்”
திட்டத்தை தொடங்கி வைத்து, பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வட சென்னை வளர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை தொடக்கி வைத்தார். திராவிட மாடல் அரசு, இந்த பகுதியை எவ்வளவு முக்கியமாக நினைக்கிறது என்பதற்கு வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற பெயரே போதுமானது என தெரிவித்தார்.
சென்னை மாநகரை, இந்தியாவின் தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும் என்பது வேண்டுகோள் அல்ல, கட்டளை; சென்னை நவீனமாகும், சென்னையை நவீன நகரமாக மாற்ற உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.
சென்னையின் அனைத்து வளர்ச்சிகளும் திமுக உருவாக்கியதுதான். அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, தொல்லியல் பூங்கா டைடல் பார்க் உள்ளிட்டவை என முதலமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.
219 திட்டங்கள்:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (14.3.2024) சென்னை, தங்க சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், வடசென்னை பகுதிக்கு விரிவான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பள்ளிக்கல்வித் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, காவல்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மீன்வளத் துறை ஆகிய பதினோரு துறைகளை உள்ளடக்கி 4181.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் முதற்கட்டமாக 87 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
எஞ்சியுள்ள திட்டப் பணிகள் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கான இலச்சினையை வெளியிட்டார். முன்னதாக,
வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டம்
சென்னை மாநகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும், கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது. சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
வடசென்னை மேம்பாட்டிற்காக திட்டமிடப்பட்டுள்ள திட்டப்பணிகள்
சென்னை முழுவதும் ஒரே சீரான மற்றும் விரிவான வளர்ச்சியை உறுதிசெய்வதற்கான முயற்சியில், பதினோரு வெவ்வேறு துறைகளை உள்ளடக்கிய முக்கியமான திட்டப்பணிகளை செயல்படுத்துவதற்காக 4181.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னையின் சீரான வளர்ச்சிக்குத் தேவையான முக்கியத் திட்டங்களைக் கண்டறியும் நோக்கில், பல்வேறு துறையைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் இணைந்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (CMDA) நடத்தப்பட்ட மிக நுட்பமான கணக்கெடுப்பிலிருந்து மாற்றத்திற்கான இந்த புதிய முயற்சி உருவானது.
வடசென்னை முழுவதும் 3800-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து, விரிவான வினாப்பட்டியல் கணக்கெடுப்பு வாயிலாக சேகரிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அப்பகுதிக்கு உடனடியாகத் தேவைப்படும் திட்டங்கள் கண்டறியப்பட்டன. இந்த கணக்கெடுப்பு முடிவுகள், அப்பகுதி குடியிருப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் கண்டறிய உதவியதுடன் அப்பகுதியின் உட்கட்டமைப்பு பற்றாக்குறை இடைவெளிகளை விரிவாக மதிப்பிடவும் உதவி புரிந்தன. தொடர்புடைய துறைகளுடன் கலந்தாய்வுகள், அதிகளவிலான பலன்களை ஏற்படுத்திட உத்திசார் நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்து, முன்னுரிமை அடிப்படையிலான திட்டப் பணிகள் தொகுக்கப்பட்டன.
இந்தத் திட்டப் பணிக்கான நிதியின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமானது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்டங்களுக்கு 440.62 கோடி ரூபாயும், ஏனைய துறைகளின் திட்டங்களுக்கு 886.46 கோடி ரூபாயும் பங்களிக்கும். சம்பந்தப்பட்ட துறைகள், வாரியங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் வாயிலாக எஞ்சியுள்ள நிதிகள் அடுத்த இரண்டாண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும்.
வட சென்னையின் முக்கிய இடங்களில் "வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்" கீழ் வளர்ச்சியின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்ட முக்கிய திட்டங்களில், மாதிரி பள்ளிகளை மேம்படுத்துதல், ஏற்கத்தக்க விலையில் வீடுகள், திறன் மேம்பாட்டு மையத்தை உருவாக்குதல், புதிய பேருந்து முனையங்கள் மற்றும் பணி மனைகளை தரம் உயர்த்துதல் மற்றும் கட்டுமானம், முக்கிய பகுதிகளில் துணை மின்நிலையங்களை நிறுவுதல், போதைப்பொருள் மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை அமைத்தல், சிசிடிவி கேமராக்களை பொருத்துவதன் வாயிலாக பாதுகாப்பினை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக உயர்தர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணி, குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்றல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள், வணிக சந்தைகள், சலவையகம், குருதி சுத்திகரிப்பு மையங்கள் போன்ற உட்கட்டமைப்பு கட்டுமானங்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
வட சென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்கப் பணிகள் விவரம்
வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 1034.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 திட்டப்பணிகள், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 1071.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 86 திட்டப்பணிகள், சென்னைப் பெருநகர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 946.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 49 திட்டப்பணிகள், சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 440.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 திட்டப்பணிகள், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 287.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 திட்டப்பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 287.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
4 திட்டப்பணிகள், கல்வித் துறை சார்பில் 57.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
2 திட்டப்பணிகள், காவல் துறை சார்பில் 28.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
6 திட்டப்பணிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 திட்டப்பணி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 திட்டப் பணிகள், மீன்வளத் துறை சார்பில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 திட்டப் பணி, என மொத்தம் 4181.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும்.
இதன்மூலம் வடசென்னையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் வழிவகுக்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எல்லாருக்கும் எல்லாம் என்பதே வளர்ச்சி எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் பல நூறு கிலோ மீட்டருக்கு வடிகால் பணிகள், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் பல்வேறு மேம்பாலங்களை உருவாக்கியது திமுகதான் எனவும் ,வடசென்னை வளர்ச்சி திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.