CM Stalin Meet PM: ”தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளியுங்கள்” - பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த கோரிக்கைகள் இதுதாங்க..!
பிரதமர் மோடியிடம் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமரை சந்தித்து, முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக இந்த தொகுப்பில் அறியலாம்.
முதலமைச்சரின் கோரிக்கைகள்:
- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - இரண்டாம் கட்டத்திற்கான நிதி பங்களிப்பு முறையை சீர்படுத்த வேண்டும்
- விமான நிலைய விரிவாக்கத்திற்கான பாதுகாப்புத்துறை நிலங்களை இலவசமாக வழங்குதல்
- காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார்ந்த சலுகைத் திட்டம்
- பி.எம். மித்ரா பூங்கவின் முதன்மை மேம்பாட்டாளராக சிப்காட்டினை நியமித்தல்
- இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைத்தல்
- ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துதல்
- தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்துதல்
- ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுதல்
- தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிப்பட்டியலில் ”ன் (N), க(KA)” என முடிவடையும் பெயர்களை "ர் (R)" விகுதியுடன் மாற்றக் கோருதல்
- கடலோரக் காற்றாலை மின்னுற்பத்தி - பெரும்பங்கை தமிழ்நாட்டிற்கு வழங்குதல்
- சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகளை களைதல்
- இலங்கை தமிழர்கள் விவகாரம் - ஈழத்தமிழர்களுக்கு சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள் அளித்திட இலங்கை அரசை வலியுறுத்துதல்
- பாக் வளைகுடப் பகுதிகளில் மீனவர்களின் பரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் , ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
பிரதமர் சென்னை வருகை:
ஒருநாள் பயணமாக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் 1,200 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார். பின்னர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இறுதியாக பல்லாரவத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே, நெடுஞ்சாலைத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சில புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் - ஸ்டாலின்
அப்போது தமிழக அரசு சார்பிலான கோரிக்கைகளை முன்வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் “கச்சத்தீவை திரும்ப பெறுவது என்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாத்தலாகும். பாக்-நீரிணை பகுதியிலுள்ள ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வாழும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதரத்திக்காக நேரடியாக மீன்பிடி தொழிலை நம்பியுள்ளனர்.
சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் தாண்டிச் செல்லும் நிகழ்வுகளில் இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் தாக்குதலுக்கு வழிவகுக்கும் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை சீர்குலைக்கும். எனவே, “கச்சத்தீவை” இந்தியாவிற்கு திரும்பப்பெறுவது மற்றும் பாக்- வளைகுடாபகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது ஆகியவை தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது” என பிரதமரிடம் வலியுறுத்தினார்.