எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
ஃபெஞ்சால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைக்கின்ற குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் கரையை கடந்தாலும் பல்வேறு இடங்களில் மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடி வருகிறது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை சற்று குறைந்தாலும் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கிய வண்ணம் உள்ளது.
இதனிடையே மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோடம்பாக்கம் ஏரியாவில் மழை பெய்வது நின்றுவிட்டால் தேங்கி நிற்கின்ற தண்ணீர் எல்லாம் வடிந்துவிடும். மழை இன்னும் நிற்கவில்லை. அமைச்சர்கள் இருந்து நிலைமையை சீர்செய்து வருகின்றனர். மின்சாரம் பாதிப்பு இருப்பதால் மின்சாரத்துறை அமைச்சரையும் அனுப்பி வைத்துள்ளேன். போக்குவரத்து துறை அமைச்சரும் களத்தில் உள்ளார். அதிகாரிகளை நியமித்து போதுமான துரித ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்களை நான் மதிப்பதில்லை. எதையும் எதிர்கொள்ள சென்னை தயார் நிலையில் உள்ளது. என் தொகுதி மட்டுமல்ல. சென்னையில் மழை பெய்தால் எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ அங்கெல்லாம் தண்ணீர் தேங்குவதில்லை. தலைநகரம் தப்பிக்கவுமில்லை; தத்தளிக்கவுமில்லை. நிம்மதியா இருக்கு. வானிலையை ஓரளவுதான் கணிக்க முடியும். முழுவதுமாக கணிக்க முடியாது. திடீரென மாறிடுது. வானிலை ஆய்வு மையத்தை குறை சொல்ல முடியாது.
வானிலை ஆய்வு மையம் சொல்வதை வைத்துதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்கிறோம். அதை தவறு என்று சொல்லிவிட முடியாது. திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. அங்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவருக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையா போச்சு. ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல. ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து தான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதுதான் எங்கள் குறிக்கோள். அதுதான் எங்கள் கொள்கை” எனத் தெரிவித்தார்.