4 மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் கூட்டம்; முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள் என்னென்ன..?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும்.
வேளாண் பொருட்களுக்கு உரிய சந்தை விலை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் நிலுவையில் உள்ள சாலை பணிகளை முடித்து பொதுமக்கள் இன்னல் போக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் நாகையில் அதிகாரிகள் மத்தியில் பேசினார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அதிகாரிகள் மத்தியில் பேசிய அவர், இதுவரை 17 மாவட்டங்களில் கள ஆய்வு திட்டம் ஆய்வு நடைபெற்று இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் தொடங்கிய கள ஆய்விற்கும் தற்போது நடைபெற்று வரும் கள ஆய்விற்கும் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கள ஆய்வு திட்டத்தை அதிகாரிகள் புரிந்து செயல்படுகின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டம், கலைஞர் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம், மக்களை தேடி மருத்துவம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்டவைகளை அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வேளாண் உற்பத்தி அதிகரிக்க சிறப்பு திட்டம் தேவை. இயற்கை சீற்றத்தாலும் உரிய வருமானம் இல்லாததால் தென்னை சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது. அது கவலை அளிக்கிறது. அதனை உயர்த்த நடவடிக்கை தேவை. உழவர்களின் உழவு பணி ஒரு பக்கம் நடைபெற்றாலும் வேளாண் பொருட்களுக்கு உரிய சந்தை விலை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். சந்தை வசதிகளை பெருக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை தமிழக அரசு மார்ச் மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்
பட்டா மாறுதல் விண்ணப்பங்ள் நிலுவையில் உள்ளவைகளை முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் நிலுவையில் உள்ள சாலை பணிகளை முடித்து பொதுமக்கள் இன்னல் போக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் அனைத்து பணிகளையும் முடிப்பீர்கள் என நம்புகிறேன். அதிகாரிகளும், அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் மாவட்ட நிர்வாகம் தலைமைச் செயலகமும் ஒருங்கிணைந்து செயல்படுவது தான் நல்லாட்சியின் இலக்கணம். நாம் அனைவரும் மக்கள் சேவகர் என்பதை நினைவில் வைத்து பணியாற்றுவோம் தொடர்ந்து மக்களுடன் இருந்து அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்த செயல்படுவீர்கள் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.