(Source: ECI/ABP News/ABP Majha)
Gram Sabha Meeting: “மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான்” - கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் பேச்சு..!
மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.
மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அதனை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கிராம சபை கூட்டங்கள்
சுதந்திர போராட்ட வீரரும், தனது அகிம்சை வழியால் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் காந்தியடிகள். 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த காந்திக்கு இன்று 154வது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கிராம சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.
அதில், “இந்த அரசு மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த 4 கிராம சபை கூட்டங்களின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. மேலும் கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் பொதுமக்களை இதுபோன்ற கிராமசபை கூட்டங்களுக்கு வரவழைக்கும் வகையில் கிராமசபை கூட்ட அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு, பல ஊராட்சிகளிலும் வீடு தோறும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மகளிர் நலன், காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத் தொகை, விவசாயிகள் நலன்,நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் குறும்படங்கள் ஒளிபரப்பி மக்களிடையே காட்சிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள்
கிட்டதட்ட தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது இந்த கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் தனது உரையில், “கிராம சபை கூட்டங்களை திமுக அரசு முறையாக எந்தவித தடங்கலும் இன்றி நடத்திக்கொண்டு வருகிறது. கிராம மக்களின் குரல் எந்த சூழ்நிலையிலையும் தடையின்றி ஒலிக்க வேண்டும் என்று தான் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருகிறது. மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கும் உத்திரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயக தேர்தல் முறை பிறந்த தொட்டில் என வரலாறு சொல்கிறது. குடவோலை முறையால் தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி அமைப்பு மலர்ந்துச்சு. அந்த வகையில் கிராமங்களில் தான் மக்களாட்சி முதல் முறையாக தோன்றியது. கிராம சபை கூட்டம் என்பது சோழ பேரரசு காலம் தொட்டே வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த பேரரசில் ஊர் மற்றும் மகாசபை என்ற இரு அவைகள் இருந்துச்சு. இதில் மகா சபை தான் தற்போதைய கிராம சபை. மக்களாட்சியின் ஆணி வேராக இருப்பது கிராம சபை கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து தங்களுடைய தேவைகளையும், பயன்களையும் விவாதித்து வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலேயும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்” என தெரிவித்தார்.
இன்று ஒவ்வொரு மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். கிராமசபை கூட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் அனைத்து ஊராட்சிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஊராட்சிகளின் நிதிநிலை அறிக்கை தொடங்கி டெங்கு காய்ச்சல் தடுப்பு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரககுடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம் ஆகியவை பொதுப் பொருளாக வைத்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Gandhi Jayanti 2023: மக்களின் உரிமைக்குரல்.. அகிம்சையின் அடையாளம்.. “காந்தி மகான்” பிறந்த தினம் இன்று..!