CM MK Stalin | கான்வாய்களை குறையுங்கள்.... அதிரடி உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கான்வாய்களை குறைக்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர்களுக்கு பாதுகாப்பாக கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். இது அனைத்து முதலமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு முறையே. அதேபோல முதலமைச்சர் வருகிறார் என்றால் அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும். சாலையில் பொதுமக்கள் நிறுத்தப்பட்டு முதலமைச்சர் செல்லும் வரை சாலை போக்குவரத்து நெரிசல் இன்றி இருக்கும். இதுவும் ஒரு பாதுகாப்பு அம்சத்தின் கீழ் வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கான்வாய்களை குறைக்கச்சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தனது கான்வாய் செல்லும்போது பொதுமக்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். கான்வாய்க்காக செல்லும் 12 வாகனங்களில் 6 வாகனங்களை குறைக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர்களுக்கு கோர்செல் பிரிவு போலீஸார் பாதுகாப்பு அளிப்பது வழக்கம். இது எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்பிரிவு. இதில் ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் இடம்பெறுவார்கள். அவர்கள் 3 ஷிப்டுகள் முறையில் இயங்கும் வகையில் பாதுகாப்பை அளிப்பார்கள். முதலமைச்சரின் கான்வாயில் இவர்கள்தான் பொறுப்பேற்று செல்வார்கள். முதல்வரின் இல்லம், அலுவலகம், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிகழ்ச்சிக்கு முன்னர் பாதுகாப்பு குறித்து கண்காணித்து அனுமதி வழங்குவது, நிகழ்ச்சி நடக்கும்போது நிகழ்ச்சிப்பகுதி, சுற்றுப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பு ஆகியவற்றை கண்காணிப்பார்கள். முதலவருடன் உடன் நின்றும் பாதுகாப்பு வழங்குவார்கள். இதற்கான ஒரு கேம்ப் அலுவலகம் முதல்வர் இல்லத்திலேயே இயங்கும். அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வார்கள்.
இது தவிர செக்யூரிட்டி சென்னை போலீஸ் (எஸ்சிபி) எனும் பிரிவு உள்ளது. இந்தப்பிரிவும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் வெடிகுண்டு சோதனை, மோப்ப நாய் சோதனை, ஜாமர்கள் போடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள். அதேபோல தலைமைச் செயலகத்தில் முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் இடங்களிலும் பாதுகாப்பை வழங்குவார்கள். இது தவிர சென்னை மாநகர போலீஸ் பாதுகாப்பும், ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பும் முதல்வருக்கு வழங்கப்படும். இவர்கள் முதல்வர் செல்லும் வழியெங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா, நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பார்கள். வழிக்காவல் எனப்படும் காவல்பணியை சாலையெங்கும் நின்று தொடர்ச்சியாக வழங்குவார்கள். இதுதவிர முதல்வர் இல்லத்தைச் சுற்றி சாலைத் தடுப்பு அமைத்து பாதுகாப்பதும் இவர்கள் பணி.
அதேபோல முதல்வர் கான்வாய் எனப்படும் குண்டுத்துளைக்காத, அரசு இலச்சினை பொருத்திய கார், விஐபி எஸ்கார்டு என மூன்று பிரிவினர் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கான்வாய்களை குறைக்கச்சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தனது கான்வாய் செல்லும்போது பொதுமக்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களும் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறு சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது, குடிநீருக்கும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் வசதியில்லாததால் பெண் காவலர்கள் சிரமங்களை சந்தித்து வருவதாக நீண்ட நாட்களாகவே புகார் இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம், சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.