Cyclone Michuang: மிக்ஜாம் எதிரொலி: சென்னைக்கு விரைந்த சேலம் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள்
சென்னையில் வெள்ள தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக சேலம் மாநகராட்சியில் இருந்து 200 தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு விரைந்தனர்.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வந்தது. சென்னை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதேபோல் சாலைகளில் இருந்த மரங்கள், மின்சார கம்பங்கள் மிக்ஜாம் புயலினால் சாலைகளில் சாய்ந்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னையில் தொடர்ந்து அதீத கனமழை பெய்து வருவதால் சென்னை மாநகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதையடுத்து வெள்ள தடுப்பு பணி மற்றும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் வெள்ள தடுப்பு பணி மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக சேலம் மாநகராட்சியில் இருந்து 200 தூய்மை பணியாளர்கள் சுகாதார மேற்பார்வையாளர்களுடன் சென்னைக்கு விரைந்தனர். குடிநீர், பாய், பெட்ஷீட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பணி உபகரங்களுடன் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து 4 பேருந்துகளில் புறப்பட்ட தூய்மை பணியாளர்களை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.
குறிப்பாக சேலம் மாநகராட்சியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள 200 தூய்மை பணியாளர்களுக்கு சென்னையில் உள்ள மக்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும், அவர்களது அடிப்படை தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனரா என்று கவனித்துக் கொள்ள வேண்டும், அதேபோல் சென்னை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து சாலைகளில் உள்ள மரங்கள், மின்சார கம்பங்களை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.