School Reopening | மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் : பள்ளி மாணவர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் இவைதான்..!
கொரோனா தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் செயல்பட உள்ளதால் மாணவர்களும், பெற்றோர்களும் அச்சம் கொள்ளத் தேவையில்லை - கல்வி அமைச்சர்
![School Reopening | மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் : பள்ளி மாணவர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் இவைதான்..! Classes 9 to 12th return for physical classes in tamilnadu today following Covid 19 protocols School Reopening | மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் : பள்ளி மாணவர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் இவைதான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/01/a60e28b3058dc35670f6e11d24dfbc6e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில், இன்று முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுகிறது. மேலும், இன்று முதல் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று நோய்த் தாக்குதல், அதன் தொடர்ச்சியான முடக்கநிலை அமல் காரணமாக, கல்வி நிலையங்கள் இரண்டு வருடங்களாக மூடப்பட்டுள்ளன. மேலும், டிஜிட்டல் இடைவெளி அதிகரிப்பு காரணமாக, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ள மாணவர்ககள் அதிகம் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில், " செப்டம்பர் 1-ஆம் தேதி (1-9-2021) முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15 - 9 -2021-க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.
அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையில் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அனைத்து பட்டய படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு பின்னர் வெளியிட்டது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள், பணியாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும். மாணவர்கள் கை கழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை பள்ளியில் இடம்பெற வேண்டும். முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "கொரோனா தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளி கல்லூரிகள் செயல்பட உள்ளதால் மாணவர்களும், பெற்றோர்களும் அச்சம் அடையத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், “மாலை 3.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெஞ்சிலும் தலா 2 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள். 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால், அந்த வகுப்பறைகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும், அடிப்படையான பாடங்கள் தவறாமல் கற்றுத்தரப்படும்” என்றும் தெரிவித்தார் .
முன்னதாக, கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதை கருத்தில் கொண்டு நேரடியாக மாணவர்கள் வகுப்புகளுக்கு வரத் தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இதற்குத் அரசு தரப்பில் ஆஜாரான அரசு வழக்கறிஞர், " மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார்கள். பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்" என்று குறிப்பிட்டார்.
மேலும், வாசிக்க:
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)