மேலும் அறிய
Advertisement
இலங்கையில் கால் பதிக்கும் சீனா; ராணுவ விமானங்களுக்காக தயாராகும் நாகை-குமரி சாலை!
நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை ராணுவ விமானங்கள் தரையிறங்கும் வகையில் பாதுகாப்பு வழித்தடமாக தேசிய நெடுஞ்சாலை 32 அமைக்கப்படுகிறது
நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை ராணுவ விமானங்கள் தரையிறங்கும் வகையில் பாதுகாப்பு வழித்தடமாக தேசிய நெடுஞ்சாலை 32 அமைக்கப்படுகிறது.
தமிழகம் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் கிழக்கே இலங்கை அமைந்து உள்ளது. இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக அறியப்பட்டாலும், சமீப காலமாக அங்கு அரங்கேறி வரும் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவை உஷார்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தென்பகுதி பாதுகாப்பான பகுதியாக கருதப்பட்டு வந்தது. இதனால் நாட்டின் முக்கியமான உற்பத்தி கேந்திரங்கள் அனைத்தும் தென்மாவட்டங்களில் உருவாக்கப்பட்டன. குறிப்பாக அணுசக்தி துறைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ், கனநீர் ஆலை உள்ளிட்டவை தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லையில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் என உச்சப்பட்ச பாதுகாப்பு உள்ளதாகவே கிழக்கு கடற்கரை சாலை அமைந்து உள்ளது. இதில் சிகரம் வைக்கும் வகையில் குலசேகரன் பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் விண்ணில் பாயும் காலம் வெகு தொலைவில் இல்லை. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் தென்மாவட்ட கடற்கரையோரங்களில் உள்ளன. இதன் காரணமாக ஏற்கனவே தூத்துக்குடியை மையமாக கொண்டு கடலோர காவல்படை இயங்கி வருகிறது. கடற்படை தளம் அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போன்று விமானப்படைக்கான விமான ஓடுதளம், கடலோர காவல்படை விமானங்களுக்கான விமான ஓடுதளம் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்தியாக தமிழக கடலோர எல்லையை பாதுகாப்பதில் முக்கியத்துவம் காட்டி உள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதனால் மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 456 கிலோ மீட்டர் தூர 4 வழிச்சாலை அமைக்க முடிவு செய்து உள்ளது. இதற்கான கள ஆய்வுகள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகள் முடிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான பாதுகாப்பு வழித்தடத்துக்கு தேசிய நெடுஞ்சாலை 32 என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சிக்கும், துறைமுகத்தை இணைத்து சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த சாலை திட்டமிடப்பட்டு உள்ளது. நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை ஏற்கனவே உள்ள கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 37 பெரிய பாலங்கள், 68 சிறிய பாலங்கள், 668 சிறிய ஓடை பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. 4 இடங்களில் ரெயில்வே தண்டவாளங்களை கடந்து வருகிறது.
இதே போன்று தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் ஆலந்தழை வரை, தற்போது உள்ள மாநில நெடுஞ்சாலையில் இருந்து முற்றிலும் தனியாக அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள சாலையை விரிவுபடுத்தினால் பல்வேறு மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலையானது ஓட்டப்பிடாரத்தில் இருந்து முடிவைத்தானேந்தல் வழியாக திருச்செந்தூருக்கு செல்கிறது. இந்த சாலை அமைவதால் ராமேசுவரம், கன்னியாகுமரி சுற்றுலா மேம்படும். பின்தங்கிய பகுதிகள் வளர்ச்சி பெறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. துறைமுக சரக்கு போக்குவரத்துக்கு உறுதுணையாக அமையும். இந்த சாலை அமைவதால் திருவனந்தபுரம் செல்பவர்கள், நெல்லைக்கு செல்லாமல் கன்னியாகுமரி வழியாக செல்ல முடியும். இதனால் பயண நேரம், பயண தூரம் வெகுவாக குறைகிறது.
அதே போன்று பாதுகாப்பு வழித்தடமாகவும் அமைகிறது. இந்த சாலையில் எந்தெந்த பகுதிகளில் விமானம் இறங்குவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகள் என்பதை விமானப்படை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளனர். அதன்படி நாகப்பட்டினத்தில் இருந்து 198 கிலோ மீட்டர் தொலைவிலும், 203 கிலோ மீட்டர் தொலைவிலும் விமானங்கள் இறங்கும் வகையில் ஓடுதளமாக, சாலை அமைய உள்ளது. இந்த பகுதிகள் ராமநாபுரம் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் பகுதிகளுக்கு வருகிறது. இந்த இடங்களில் விமானப்படை விமானங்கள் இறங்குவதற்கு வாய்ப்பான இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் சாலை நேராகவும், குடியிருப்புகளை விட்டு தொலைவிலும் அமைந்து உள்ளது. இதனால் அவசர காலத்தில் ராணுவ தளவாடங்களை விரைவாக கொண்டு செல்வதற்கும், விமானப்படை விமானங்கள் ரோட்டில் தரையிறங்குவதற்கும் வசதியாக இருக்கும்.
இதனால் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வழித்தடம் ஆய்வு நடந்து வருகிறது. அதன்பிறகு உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளது தேசிய நெடுஞ்சாலை 32. இத்திட்டம் கடற்கரையோர மாவட்டங்களுக்கு தொழில் வளர்ச்சிக்கும் ஏதுவாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion