CM Stalin: வேங்கைவயலுக்கு ”நோ”.. நாளை அரிட்டாப்பட்டி விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை தடுத்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மதுரை அரிட்டாப்பட்டியில் நாளை பாராட்டு விழா நடைபெற உள்ளது.

CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அரிட்டாப்பட்டி மக்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
அரிட்டாப்பட்டியில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஏலம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாளை அங்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்திற்கு நேரில் வந்த போராட்டக் குழுவினர், பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தனர். முன்னதாக, சுரங்கத்திற்கு எதிராக சட்டப்பேரவயில் தீர்மானம் கொண்டு வந்த போது பேசிய ஸ்டாலின், “டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன்” என பேசியிருந்தார். இந்நிலையில், அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, நாளை முதலமைச்சர் அரிட்டாப்பட்டி சென்று அங்குள்ள மக்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டபோது முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது! இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது” என பதிவிட்டு இருந்தார்.
அரிட்டாப்பட்டியில் என்ன பிரச்னை?
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மேலூரில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக மாநில அரசு அறிவித்தது. அதன்படி, இப்பகுதிகளில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளதாகவும் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, பாம்புண்ணிக் கழுகு உள்பட 250 பறவைகளும், அலங்கு, மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்வதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால், பல்லுயிர் பெருக்க மண்டலமாக மாநில அரசால் அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி முழுமையாக அழிந்துவிடும் என்பதே அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.
வேங்கைவயலுக்கு எப்போது?
அதேநேரம், குடிநீரில் மனித மலம் கலக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும், வேங்கைவயல் சென்று பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. 750 நாட்களுக்குப் பிறகு நேற்று தான் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், 3 பேர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு குற்றவாளிகள் என 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இனியாவது முதலமைச்சர் ஸ்டாலின் வேங்கைவயலுக்கு செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.





















