இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சர்... மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த திட்டம்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என் ரவியை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளார். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர், ஆளுநரிடம் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நிலுவையில் உள்ள மசோதா பிரச்சனையை இருவரும் பேசி தீர்க்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே யோசனை கூறி இருந்த நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரை சந்திக்க உள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நிலுவையில் வைத்துள்ளதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் நேரில் சந்தித்து பேசுமாறு தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில், முதல்வரை அழைத்து, சுமுகமாக பேசி ஆளுநர் இதற்கு தீர்வு காண வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டு, மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது என அரசியலமைப்பின் 200-வது பிரிவை நீதிபதிகள் இந்த வழக்கில் சுட்டிக் காட்டினர்.
இது குறித்து, தமிழக அரசின் வழக்கறிஞர் வில்சன் தெரிவித்ததாவது:“ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினோம். இது தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டுதல் வேண்டும் என கோரியுள்ளோம். அரசின் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தால் மக்கள் பணி முடங்கும். அமச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், ஆளுநரின் நகர்வு அதற்கு நேர் எதிராக உள்ளது. அது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பது தான் எங்கள் தரப்பு வாதம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தி பேச உள்ளார்.
மேலும் படிக்க
Ayodhya: அயோத்தியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் - திறந்து வைத்தார் பிரதமர் மோடி