12th Exam: ”டென்ஷன் இல்லாமல் பொதுத்தேர்வு எழுதுங்கள்" - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்....!
10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் டென்ஷன், பயம் இல்லாமல் பொதுத்தேர்வு எழுதுங்கள் என மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
12th Exam: 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் டென்ஷன், பயம் இல்லாமல் பொதுத்தேர்வு எழுதுங்கள் என மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வை 4,03,156 மாணவர்களும், 4,33,436 மாணவிகளும் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 23,747 பேர் தனித்தேர்வர்கள் ஆவார். மாற்றுத் திறனாளிகள் 5,206 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறை கைதிகள் 90 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
முதலமைச்சர் அறிவுரை
இந்நிலையில், 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், "10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் டென்ஷன், பயம் இல்லாமல் பொதுத்தேர்வு எழுதுங்கள். இது ஜஸ்ட் ஒரு தேர்வு என்ற முறையில்தான் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அணுக வேண்டும். படிக்கிற புத்தகத்தில் இருந்துதான் கேள்விகள் வரப்போவதால் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டும். தேர்வை பார்த்து பயப்படாமல் பாடங்களை ஆழ்ந்து, புரிந்து, படியுங்கள், விடைகளை தெளிவாக எழுதுங்கள் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ”உங்களுக்கு தேவையானது தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான். அது இருந்தாலே நீங்க பாதி வெற்றி அடைந்த மாதிரி தான். தேர்வு என்பது உங்களை பரிசோதிக்க அல்ல. அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது தான் தேர்வு. அதனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர் கொள்ளுங்கள். தேர்வை பார்த்து பயப்பட வேண்டாம். விடைகளை தெளிவாக, முழுமையாக எழுதுங்கள். நிச்சயமா வெற்றி பெருவீங்க. அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்று நானும் காத்திருக்கிறேன். முதல்வராக மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தில் ஒருவராக தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...'ஆல் தி பெஸ்ட்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
இதனைத் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் 7,73,688 மாணவர்களும், புதுச்சேரியில் 14,376 மாணவர்களும் எழுதவுள்ளனர். இதில் மாற்றுத் திறனாளிகள் 5,835 பேர், மாற்றுத்திறனாளிகள் 4 பேர், சிறைக்கைதிகள் 125 பேர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க