(Source: ECI/ABP News/ABP Majha)
CM MK Stalin: ’எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என தி.மு.க. அரசு செயல்படுகிறது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!
நிர்வாகம், பள்ளி, கோயில் என எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று அரசு செயல்படுகிறது என மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்த பின் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.
மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முத்தமிழ் பேரவையில் தமிழில் மருத்துவ விழா நடைபெறுவது பெருமைக்குரியது. நிர்வாகம், பள்ளி, கோயில் என 'எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்' என்று அரசு செயல்படுகிறது. தொழிற்படிப்பு நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கல்வி மற்றும் மருத்துவம் போன்றவை சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும். எத்தகைய நோயையும் குணப்படுத்தும் வசதி தமிழ்நாட்டுக்கு உள்ளது. உண்மையில் திறமையான மருத்துவர்கள் சென்னையில்தான் இருக்கின்றனர்.” என்று தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவத் தமிழ் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:#CMMKSTALIN l #TNDIPR l@CMOTamilnadu @mkstalin @mp_saminathan
— TN DIPR (@TNDIPRNEWS) January 29, 2023
1/3 pic.twitter.com/p8tDeCXemP
முதலமைச்சர் உரையின் விவரம்:
சில நாட்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற உலக E.N.T பேரவைக் கூட்டத்தில் உலகெங்கிலும் இருந்து பத்து தலைசிறந்த மருத்துவர்களுக்கு உயரிய தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பத்துப் பேரிலும் ஆசிய கண்டத்தில் இருந்து அந்தப் பெருமைமிகு பன்னாட்டு விருதுக்குத் தேர்வான ஒரே மருத்துவர் யாரென்று கேட்டால் நமது மோகன் காமேஸ்வரன் அவர்கள்தான். உரையைத் தொடங்குவதற்கு முன்னால் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் என்ற முறையில், தமிழ்நாடு மக்கள் சார்பிலே, தமிழன் என்கிற அந்த உணர்வோடு அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
2/3 pic.twitter.com/iMWV8dhT77
— TN DIPR (@TNDIPRNEWS) January 29, 2023
இந்த மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெற இருக்கிறது என்பது. முதல் மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. தமிழ் என்று சொல்லுகிறபோது, எங்களையெல்லாம் ஆளாக்கிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார், தமிழைப் பற்றி பெருமையோடு சொல்லுகிறபோது அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
உளங்கவர் ஓவியமே! உற்சாகக் காவியமே! ஓடை நறுமலரே! ஒளியுமிழ் புதுநிலவே!
பனியே! கனியே! பழரசச் சுவையே! மரகத மணியே! மாணிக்கச் சுடரே!
என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழைத் தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் கிடையாது.
அப்படிப்பட்ட அந்த அழகுத் தமிழ்மொழியில் இந்த மாநாடு நடைபெறுவது உள்ளபடியே பாராட்டுக்குரியது. பொதுவாக இதுபோன்ற மாநாடுகள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் நடக்கும். அதுவும் கோட் - சூட் அணிந்துகொண்டு தான் வருவார்கள் ஆனால், இந்த மாநாட்டில் அதிலும் குறிப்பாக இந்த மாநாட்டை நடத்தக்கூடிய மோகன் காமேஸ்வரன் அவர்கள் எப்படி இருக்கிறார் என்று பார்க்கிறீர்கள், வேட்டி, சட்டையோடு வந்திருக்கிறார்.
நான் இந்த அரங்கத்தை உற்றுப் பார்க்கிறேன் பாதிப் பேருக்கு மேல் வேட்டி சட்டையோடுதான் வந்திருக்கிறீர்கள் முழுமையாகத் தமிழில் நடக்க இருக்கக்கூடிய மாநாடு என்று நம்முடைய டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்கள் அறிவித்து இதைச் சிறப்போடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பார்த்தீர்களானால், இதுபோன்ற மாநாடுகள் எல்லாம் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலில் பெரிய அரங்குகளில்தான் நடக்கும் ஆனால் இந்த மாநாட்டைப் பொறுத்தவரைக்கும், முதல்முறையாக முத்தமிழ்ப் பேரவையில் நடக்கிறது. அதுவும் இந்த முத்தமிழ்ப் பேரவையை யார் தொடங்கி வைத்தார்கள் என்றால் தலைவர் கலைஞர்தான்.