தமிழ்நாட்டில் இன்று முதல் வலம் வரப்போகும் மஞ்சள் நிற பேருந்துகள்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்ட 1000 புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளை சீரமைக்கவும் சுமார் 500 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள எட்டு கோட்டங்களில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், நன்றாக இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பேருந்துகளில் நிறம் மட்டுமில்லாமல் பேருந்துகளின் இருக்கை மற்றும் அமரும் வசதி போன்றவற்றையும் அதிகரிக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, முதற்கட்டமாக நவீன வசதிகளுடன் கூடிய மறுசீரமைக்கப்பட்ட 100 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியில் பேருந்துகள் பச்சை நிறத்தில் இயக்கப்பட்டு வந்தநிலையில், பி.எஸ் 4 ரக பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு நீல நிற வண்ண நிறங்களும் பூசப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவித்து, அவர்கள் அடையாளம் காணும் வகையில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற வண்ணத்தை பூசினர். தற்போது, நன்றாக இயங்கிகொண்டிருக்கும் பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு, அவற்றிற்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற பேருந்துகள்:
மஞ்சள் நிற பேருந்துகளில் நிறத்தை மட்டும் மாற்றாமல், உள்கட்டமைப்பும் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக, பயணிகள் அதிகம் பயணிக்கும் அரசு பேருந்துகளில் 54 இருக்கை வரை இருக்கும். ஆனால், தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 50 இருக்கைகள் மட்டுமே இருக்கும். இதன்மூலம், பயணிகள் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், தமிழ்நாடு அரசு சார்பில் அதிகபட்சமாக ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ. 14 லட்சம் வரை செலவு செய்யப்பட்டதாகவும், இத்தகைய பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.