Sanjib Banerjee to Meghalaya | பிரிவு உபசார விழா வேண்டாம்.. சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்ட சஞ்ஜிப் பானர்ஜி!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு, சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்
மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு, சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த சஞ்ஜீப் பானர்ஜி, கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி என்ற அந்தஸ்துடன் அமர்ந்தார்.
தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்று முழுமையாக 11 மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரை தீடீரென உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்தது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதினர். நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர். ஒருவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டால் அவரை இரண்டு ஆண்டுகள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட முடியாத அளவுக்கு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
பெரிய நீதிமன்றங்களில் அதிக வழக்குகளை திறம்பட கையாண்ட அனுபவம் கொண்ட சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா போன்ற சிறிய மாநில உயர்நீதிமன்றங்களில் அவரது அனுபவம் முழுமையாக பயன்படாது. எனவே, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார், பி.எஸ். ராமன், நளினி சிதம்பரம், விஜய் நாராயணன் உள்ளிட்ட 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதினர்.
ஆனால், எதுவும் எடுபடவில்லை. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்த சஞ்ஜீப் பானர்ஜி பணியிட மாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதனால், அவர் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்