`கொஞ்சம் தண்ணீர் கொடுங்க!’ - ஹெலிகாப்டர் விபத்துப் பகுதிக்கு விரைந்தவரின் நேரடி அனுபவங்கள்..!
ஹெலிகாப்டர் விபத்து சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் தாங்கள் பார்த்ததைப் பற்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களுள் முக்கியமான வாக்குமூலம், இந்த விபத்தை நேரில் பார்த்த சுகுமாருடையது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட அவரோடு பயணித்த 13 பேர் ஹெலிகாப்டர் விபத்து காரணமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த மேலதிகத் தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. விபத்துச் சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் தாங்கள் பார்த்ததைப் பற்றி செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்து வருகின்றனர். அவர்களுள் முக்கியமான வாக்குமூலம், இந்த விபத்தை நேரில் பார்த்த சுகுமாருடையது.
தன் வீட்டில் இருந்த சுகுமாரை அவரது பக்கத்து வீட்டு நண்பர் தன் வீட்டுக்கு அருகில் ஹெலிகாப்டர் விபத்து நடந்திருப்பதாகக் கூறி அழைத்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற சுகுமார், தன் வீட்டுக்கு அருகில் உள்ள மலைப் பள்ளத்தில், எரிந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, இரண்டு மரங்களுக்கு இடையில் சிக்கியிருந்ததைக் கண்டுள்ளார்.
`நான் அருகில் இருந்ததால், சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்தைச் சென்றடைந்தேன். அங்கு ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டோம். எனினும் அது எரிந்து கொண்டிருந்ததால், உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்ற எந்த வழியும் இல்லாமல் போனது. மேலும், அது வெடித்து சிதறலாம் என்றும் நாங்கள் கருதினோம். உள்ளே சிக்கியிருந்த நபர்களை எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது’ என்று இதுகுறித்து நினைவுகூர்கிறார் சுகுமார்.
சுகுமாரும், அவருடன் இருந்தவர்களும் காவல்துறை, தீயணைப்புப் படையினர் ஆகியோரை அழைத்தவுடன் அவர்கள் அப்பகுதிக்கு வந்து, ஹெலிகாப்டரில் இருந்து யாரேனும் விழுந்திருக்கிறார்களா என்று அந்தப் பகுதி முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர்.
`சம்பவ இடத்தை அடைந்தவுடன், அங்கு மூன்று நபர்களைக் கண்டோம். பள்ளத்தில் இறங்கி, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்று பார்த்தோம். அவர்களுள் இருவர் உயிருடன் இருந்தனர். எனினும், அவர்களை மேலே தூக்கிக்கொண்டு வர எங்களிடம் எந்த உபகரணமும் இல்லை. அதனால் நாங்கள் மீண்டும் மேலே ஏறி, பெட்ஷீட்கள், கயிறுகள் முதலானவற்றை எடுத்துக்கொண்டு சென்றோம்’ என்கிறார் சுகுமார்.
சுகுமாரும் அவருடன் இருந்தவர்களும் காவல்துறையினர் உதவியுடன் ஒருவரை மேலே கொண்டு வந்துள்ளனர். அங்கு மீண்டும் வந்தபோது, அவர் `கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்’ என்று ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் எல்லாம் முடிந்த பிறகு, ஒரு ராணுவ அதிகாரி சுகுமாரிடம் தண்ணீர் கேட்டவர் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் என்று கூறியுள்ளார். `என்னிடம் தண்ணீர் கேட்டவர் பிபின் ராவத் என்று தெரிந்த போது, அவருக்குத் தண்ணீர் கொடுக்க முடியாமல் போனதற்கு வருத்தப்பட்டேன்’ என்கிறார் சுகுமார்.
இந்த விபத்து நிகழ்ந்தது எவ்வாறு என்பது குறித்து பேசியுள்ளார் சுகுமார். `இரண்டு மரங்களில் மோதியுள்ளது ஹெலிகாப்டர். முதலில் ஒரு மரத்தில் ஹெலிகாப்டர் மோதி, மரம் பாதியாக உடைந்துள்ளது. அதனால் அடுத்த மரத்தில் ஹெலிகாப்டர் மோதி, அந்த மரமும் உடைந்ததோடு, ஹெலிகாப்டரும் விழுந்துள்ளது. இந்த மரங்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை’ என்கிறார் சுகுமார்.
நாட்டின் பாதுகாப்புத் துறையின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்திருப்பது குன்னூரின் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி.. The News Minute