Kodanadu Case: தீவிரமடையும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் சிபிசிஐடி போலீசார்..
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்டம் அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் இன்றைய விசாரணையில், விசாரணை அதிகாரி ஏ டி எஸ் பி முருகவேல் தலைமையிலான சிபி சிஐடி போலீசார் ஆஜராகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இங்கு நடந்த கொள்ளை முயற்சியின் போது காவலாளி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் நீலகிரி மாவட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மேற்கு மண்டல ஐ.ஜி தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வந்தனர். தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. கூடுதல் எஸ்பி தலைமையிலான கோவை சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இவ்வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட முக்கிய நபரான ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இறந்து போன கனகராஜின் கசோதரர் தன்பால் மற்றும் உறவினர்கள், சந்தேகத்திற்கு உரிய நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் பலருக்கும் சம்மன் அனுபப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதி வழக்கு சம்பந்தமாக மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த அய்யப்பனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அய்யப்பன், ஜெயலலிதாவிடம் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ஓட்டுநராக பணியில் இருந்ததாக தெரிவித்த அவர், 2021 ஆம் ஆண்டு வரை ஓட்டுநராக இருந்ததாக தெரிவித்தார்.
சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து வெளியில் வருவது வரை வாகனத்தை மெயின்டைன் செய்துவிட்டு, பின்னர் அதனைக் கொடுத்து விட்டு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் சொந்த காரணங்களால் தன்னால் வேலைக்கு செல்ல முடியாமல் போனதாகவும், தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது மீண்டும் அழைத்து வருவது போன்ற வேலைகளை செய்து வருவதாக தெரிவித்தார். கனகராஜ் 2000 க்கு பிறகுதான் பணிக்கு வந்ததாக தெரிவித்தார். கனகராஜ் அவரது பழக்கவழக்கம் சரியில்லை என்பதாலும் சொல்வதைக் கேட்காமல் இருந்ததாலும் பணியில் இருந்து நிறுத்தி விட்டதாக தெரிவித்த அவர் ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் என்ன சொல்லினாலும் கேட்க வேண்டும் அதனை பின்பற்ற வேண்டும் என ஸ்ட்ரிட்டாக இருப்பார் என தெரிவித்தார்.
இந்நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்டம் அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி ஏ டி எஸ் பி முருகவேல் தலைமையிலான சிபி சிஐடி போலீசார் ஆஜராகின்றனர்.
அப்போது கனகராஜ், அவரது சகோதரர் தனபால் உள்ளிட்டோர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8 செல்போன்களில் பதிவாகியுள்ள தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு ஜூலை மாதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் இன்னும் வராததால் கால அவகாசம் கேட்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆய்வகத்தில் இருந்து தகவல்களை விரைவில் பெற்று கைதானவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதும், செல்போனில் பதிவான தகவல்களும் ஒத்துப்போகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.