Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க கோரி கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க கோரி கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் :
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்னை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டும், மேலாண்மை ஆணையம் டெல்லியை தலைமையிடமாக கொண்டும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் , தமிழ்நாடு , கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டமானது எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு சார்பில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
2.5 டி.எம்.சி திறக்க உத்தரவு:
அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி நீரை திறக்க கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம் கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் , தமிழ்நாடு , கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது தமிழ்நாடு சார்பில், 2 டி.எம்.சி பாக்கி நீரையும், ஜூனில் தரவேண்டிய 9.17 டி.எம்.சி நீரையும் திறக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை அடிப்படையில் 2.5 டி.எம்.சி நீரை திறக்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அடுத்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டமானது, ஜூன் மாதம் தொடக்கத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், இக்கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து, விவாதிக்கப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றன.