Vijayakanth Cinema: வில்லன்கள் கொண்டாடும் நிஜ ஹீரோ கேப்டன் விஜயகாந்த் - இதைவிட வேறு என்ன வேண்டும்?
Vijayakanth Cinema: மறைந்த நடிகர் விஜயகாந்தை திரையுலகின் முக்கிய வில்லன் நடிகர்கள் போற்றி புகழ்வது ஏன் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
Vijayakanth Cinema: மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து தமிழ் திரையுலகின் முக்கிய வில்லன் நடிகர்கள் சொல்வது, சொன்னது என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
விஜயகாந்த் எனும் சகாப்தம்:
தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத ஆக்சன் ஹீரோவாக வலம் வந்ததோடு, திரைப்படத்துறையில் இருந்து வந்து தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவராகவும் திகழ்பவர் விஜயகாந்த். ரசிகர்களாலும், தொண்டர்களாலும் ”கேப்டன்” என வாஞ்சையுடன் அழைக்கப்படும் இவர் ஒரு மேம்பட்ட மனிதராகவும் போற்றப்படுகிறார். நல்ல நடிகர், அரசியல்வாதி, தலைவன் என அனைத்து தரப்பினராலும் ஒருவர் போற்றப்படுவது என்பது அவ்வளவு எளிய காரியமல்ல. ஆனால், ஆணவம், என்பதை துறந்து அதனை சாத்தியப்படுத்தி பெரும் பேருக்கு சொந்தக்காரரான விஜயகாந்த், சக நடிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறார். அந்த வகையில், தமிழ் திரைப்பட வில்லன்கள் பலருக்கும் வாழ்வளித்த வள்ளலாக கொண்டாடப்படும் விஜயகாந்த் குறித்து அவர்கள் சொன்னது என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
விஜயகாந்த் எனக்கு அண்ணன் - ஆனந்த ராஜ்:
விஜயகாந்த் தொடர்பாக பழைய பேட்டி ஒன்றில் பேசிய ஆனந்த் ராஜ், “அவர் எனக்கு அண்ணன் போன்றவர். விஜயகாந்த் பிறந்தநாளுக்கான போஸ்டர்களை எல்லாம் நான் ஒட்டி இருக்கிறேன். அவருடனான உறவு என்பதை வார்த்தைகளால் எல்லாம் சொல்ல முடியாது. எம்.ஜி. ஆர் என்றால் நம்பியார் நியாபகம் வருவதை போன்று விஜயகாந்த் என்றால் ஆனந்தராஜ் நியாபகம் வருவார். இன்று எந்தவொரு ஹீரோவும் சகநடிகரை பாராட்டுவதோ, முன்னிலைப்படுத்துவதோ இல்லை. ஆனால், ”விஜயகாந்த் பெரும் கூட்டத்திற்கு முன்பே ஆனந்த ராஜ் தான் இந்த படத்தில் ஹீரோ, நான் செகண்ட் தான்” எனவெளிப்படையாகவும், வெள்ளந்தியாகவும் கூறினார்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
வீட்டில் விஜயகாந்த் புகைப்படம் - பொன்னம்பலம்:
பொன்ன்ம்பல் பேட்டி ஒன்றில் பேசுகையில், “விஜயகாந்த் நேர்மையானவர். அவர் தெய்வம். எல்லோருக்கும் உதவுக்கூடியவர். என் வீட்டில் விஜயகாந்த் படம் மட்டும் தான் இருக்கு. பட வாய்ப்புகள் குறைந்திருந்த நேரத்தில் செந்தூர பாண்டி படத்தில் கமிட்டானேன். அதன் பிறகு அந்தப் படம் தொடர்பாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். ரூ.50,000 சம்பளம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். எனவே நான் சார் வீட்ல ரொம்ப கஷ்டம் நல்ல சம்பளமாக கொடுங்கள் என்றேன். அதற்கு அவர் விஜயகாந்த் உனக்கு நல்ல சம்பளம் கொடுக்க சொல்லியிருக்கிறார். அது கவரில் இருக்கிறது. அக்ரிமெண்ட்டும் இருக்கிறது. நீ வீட்டில் போய் பிரித்து பார்த்துக்கொள் என்றார். வீட்டில் சென்று பார்த்தேன். ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் பணமாக மட்டும் இருந்தது. ஒப்பந்தத்தை பார்க்கும்போது அதில் எனது மொத்த சம்பளம் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் என இருந்தது. அதை வைத்து ஒரு வருடம் ஓட்டி விடலாம் என மகிழ்ச்சி அடைந்தேன்" என சிலாகித்தார்.
தங்கமான மனுஷன் - மன்சூர் அலிகான்:
தனியாய் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகாந்த், “எனக்கு பிடித்த நடிகர் என்றால் அது எப்போதுமே விஜயகாந்த் தான். அவர் கிட்ட உதை வாங்குவதை நான் பெருமையா நினைக்கிறேன். விஜயகாந்த் எனது வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவர். அவர் இல்லாட்டி நான் இல்ல. நான் சொத்தை விக்கிறேன் வாங்குறேன் எதுவாக இருந்தாலும் அவரால் மட்டும்தான். என்னை மாதிரி நூற்றுக்கணக்கான நபர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரால் பல பேர் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கிறது. விஜயகாந்த் தங்கமான மனுஷன். ஒரு கால ஊன்றி இன்னொரு காலால் ரவுண்டு அடித்து வருவார். அவர் கால் அவருக்கு ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம். திருமலை நாயக்கர் தூண் மாதிரி இருக்கும்” என தெரிவித்தார்.
இரும்புக் கதவை உடைத்த கேப்டன் -நாசர்:
நாசர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “விஜயகாந்த் அலுவலகத்திற்கு சென்றால் உணவு கிடைக்கும் என்ற ஒற்றை நம்பிக்கையில் சென்று, அங்கு உணவு அருந்தியவர்களில் நானும் ஒருவன். திரைப்படத்துறை கல்லூரி மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்களது கல்வியை மதித்து ஊமை விழிகள் படத்தில் நடித்தார். அந்த ஒரு படம் தான் திரைப்படக் கல்லூரிக்கான இரும்புக் கதவு உடைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை திரைப்படக் கல்லூரியில் இருந்து வந்த ஒரு இயக்குனர் வெற்றி பெற்றது இல்லை” என தெரிவித்துள்ளார்.