Bus Accident: படியில் தொங்கியபடி பயணம்! பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சிறுவன்!
சென்னையில் பேருந்தில் ஆபத்தான முறையில் படியில் தொங்கியப்படி பயணம் மேற்கொண்ட சிறுவன், சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த சிறுவன் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
படியில் தொங்கியபடி பயணம்:
சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் தியாகு. இவரது மகன் விக்னேஷ் (வயது 15). விக்னேஷ் 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட நிலையில், அவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகள் செய்து வந்துள்ளார். விக்னேஷ் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து திரு.வி.க. நகர் செல்லும் மாநகர பேருந்தில், பெரம்பூர் சர்ச் பஸ் நிறுத்தத்தில் ஏறியுள்ளார். திரு.வி.க. நகர் செல்வதற்காக பயணச்சீட்டு வாங்கினார்.
விக்னேஷ், பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அடுத்தடுத்து பேருந்து நிறுத்தங்களில் படியில் இருந்து ஏறி இறங்கியுள்ளார். பேருந்து நடத்துனர் பல முறை கூறியும் விக்னேஷ் காது கொடுத்து கேட்கவில்லை. தொடர்ந்து படியில் தொங்கியப்படியே பயணம் மேற்கொண்டுள்ளார்.
உடல் நசுங்கி உயிரிழப்பு:
அப்போது திரு.வி.க. நகர் எஸ்.ஆர்.பி. கோவில் தெரு மசூதி அருகே பயணிகளை ஏற்றி விட்டு மீண்டும் பேருந்து புறப்பட்டது. முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி வந்த விக்னேஷ், கிழே இறங்கிவிட்டு மீண்டும் ஏற முயற்சித்துள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. பபேருந்து சக்கரத்தில் சிக்கிய விக்னேஷ், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியார் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விக்னேஷ் படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும்போது, அவரை பல முறை பேருந்து நடத்துனர் எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் விக்னேஷ் கேட்காததால் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓட்டுநர் தனசேகரன் (52), நடத்துனர் பார்த்திபன் (41) இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.