(Source: ECI/ABP News/ABP Majha)
அமைச்சர் உதயநிதியின் கவனத்திற்கு... பார்வையற்ற இளம் வெற்றி வீரரின் உருக்கமான வேண்டுகோள்!
மகாராஜா, மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல, பார்வையற்ற தங்களுக்கு முழு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று வேதனைப்படுகிறார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக் கோப்பையைப் பெற்றுத் திரும்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த பார்வையற்ற இளம் கிரிக்கெட் வீரர் மகாராஜா, அரசு வேலைக்கு அமைச்சர் உதயநிதி ஆவன செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச பார்வையற்றோருக்கான விளையாட்டுக் கூட்டமைப்பு (IBSA) நடத்திய கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த இறுதிப் போட்டி லண்டனில் உள்ள பிர்மிங்காமில் ஆகஸ்ட் 18 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி வெள்ளியைப் பரிசாக வென்றது. இதில் வீரர் மகாராஜாவும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி உள்ளார்.
யார் இந்த மகாராஜா?
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுக்காவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மகாராஜா. தியாகராஜர் கலை, அறிவியல் கல்லூரியில் படித்தவர். 3ஆம் வகுப்பு வரை பார்வை ஓரளவு தெரிந்த நிலையில் பிறகு முழுவதுமாகப் பறிபோனது. தொடர்ந்து கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் இடைவிடாது விளையாடத் தொடங்கினார் மகாராஜா.
இடது கை பவுலர் மற்றும் பேட்ஸ்மேனாகக் களம் காணத் தொடங்கினார். இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட அவர், பார்வையில்லாத நிலையில் 11ஆம் வகுப்பிலேயே இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழக வீரர் ஆவார்.
தினமும் 15 மணிநேரமும் பயிற்சி
காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி பெற்றதாகக் கூறும் மகாராஜா, மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல, பார்வையற்ற தங்களுக்கு முழு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று வேதனைப்படுகிறார்.
நிதிப் பற்றாக்குறையால் சிரமப்பட்ட மகாராஜா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள, தூத்துக்குடி எ.பி. கனிமொழி உதவி செய்துள்ளார். குறிபாக மகாராஜா இங்கிலாந்து செல்ல ரூ.70 ஆயிரம் கொடுத்து உதவி உள்ளார்.
இந்த நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தனக்கு அரசு வேலை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று மகாராஜா கோரிக்கை விடுக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணியைச் சேர்ந்த தங்களின் வீரர்களுக்கு குஜராத் அரசு 70 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பரிசாக அளித்தது. அவர்களுக்கு அரசு வேலை வழங்க சான்றிதழ்களைச் சரிபார்த்து வருகிறது. ஒடிசா அரசு, ஒவ்வொரு வீரருக்கும் ரூ.2.5 லட்சத்தை அளிக்க முடிவு செய்துள்ளது. 17 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு செய்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் எனக்கு அரசு வேலை வழங்க, அமைச்சர் உதயநிதியும் தமிழக அரசும் ஆவன செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.