Annamalai | தமிழகத்திற்கு 3 முதலமைச்சர்கள் - பாஜக தமிழக தலைவர்அண்ணாமலை
‘அடுத்த ஆறு மாசத்துல மீடியா நம்ம கண்ட்ரோல்’ என அண்ணாமலை பேசியதும் சர்ச்சையானது.
தமிழகத்திற்கு 3 முதலமைச்சர்கள் உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அண்ணாமலை, தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர். ஒன்று ஸ்டாலின், இரண்டாவது உதயநிதி மூன்றாவது ஸ்டாலின் மருமகன் சபரீசன் என்றார். இது தொடர்பான பதிவை அண்ணாமலை பகீர் விமர்சனம் எனக் குறிப்பிட்டு தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தமிழகத்தில் 3 முதலமைச்சர்கள் உள்ளனர் !
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) July 21, 2021
- மாநிலத் தலைவர் @annamalai_k #TN3CMGovernment pic.twitter.com/yx6YQ0AMG0
தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் எல்.முருகன். இவர் கடந்த மாதம் புதியதாக மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, அவர் வகித்து வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி அண்ணாமலைக்கு வந்தது. இதனையடுத்து சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் ஜூலை 16ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்கள் ஆகியும் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. எதற்காக நீட் தேர்வு வேண்டாம் என்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் போன்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள், எல்.முருகனை போன்ற ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் நீட் தேர்வு வரப்பிரசாதமாக இருக்கிறது. மூலை முடுக்கெல்லாம் சென்று நீட் நல்லது என மக்களிடம் எடுத்து கூறுவோம்” என்று கூறினார். மேலும் ஊடகங்கள் மீது பெரிய மதிப்பு உண்டு. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இனி பாஜகதான் தமிழ்நாட்டின் எதிர்காலம். தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் பாஜகவை கொண்டு செல்லவதே எங்களின் இலக்கு என்றார்.
இதற்கிடையே, பதவியேற்க வருகை தந்த போது நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் ‘அடுத்த ஆறு மாசத்துல மீடியா நம்ம கண்ட்ரோல்’ எனப் பேசியதும் சர்ச்சையானது. அதில், ‘இந்த மீடியா நம்மளைப் பற்றி தவறா செய்தி போடறாங்க? என்ன செய்யலாம் என்பதையெல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டாம். அடுத்த ஆறு மாதத்தில் இங்க இருக்கற அத்தனை மீடியாவையும் நாம கண்ட்ரோல் செய்யலாம். ஏனென்றால் தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் தலைவராக இருந்த முருகன் ஐயா தற்போது தகவல் ஒளிபரப்புத்துறையின் அமைச்சராக இருக்கிறார். இந்த ஊடகங்கள் அவர் கீழ்தான் வரப்போகின்றன. தொடர்ந்து ஒரு தப்பான செய்தியைப் பதிவு செய்ய முடியாது என்றார்.
இந்நிலையில் அண்ணாமலையின் மூன்று முதல்வர்கள் பேச்சும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அவரது இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
'அன்பு.. அதானே எல்லாம்’ : இந்து கட்டிய மசூதி, உதவி செய்த கிறிஸ்தவர் - கோபாலகிருஷ்ணன் கதை!