RSS : அப்போ ஆர்.எஸ்.எஸ்ஸையும் தடை செய்யுங்க.. டிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்
அமித்ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி பெரும் அரசியல் விவாதப் பொருளாக மாறி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்டிருந்தது பற்றி பேசியிருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நீண்ட பேட்டி பெரும் அரசியல் விவாதப் பொருளாக மாறி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்டிருந்தது பற்றி பேசியிருந்தார்.
அதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தீவிரவாதத்திற்கு வித்திட்டது. மத மோதல்களைத் தூண்டும் விஷயங்களை செய்தது. அதனாலேயே அதை சட்டப்படி தடை செய்தோம். பிஎஃப்ஐ தடையை தாமத்திருந்தால் அது தேசத்தின் பாதுகாப்புக்கே அபாயமாக மாறியிருக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து டிகேஸ் இளங்கோவன் அளித்தப் பேட்டியில், பிஎஃப்ஐ அமைப்பை 90 சதவீத முஸ்லிம்கள் ஆதரித்ததில்லை. ஏனெனில் அவர்கள் ஆர்எஸ்எஸ் என்ன் செய்ததோ அதைத்தான் செய்தார்கள். அப்படியென்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தடை செய்யப்பட வேண்டும். அப்படியிருந்தால் இந்த நாட்டில் யாருமே மதத்தின் பேரில் அதிகாரம் செய்ய முடியாது.
உண்மையில் பிஎஃப்ஐ ஒருபோதும் முஸ்லிம் மதத்தை தூக்கிப்பிடித்து அதிகாரம் செய்யவில்லை. அவர்கள் யாரையும் இஸ்லாத்துக்கு மாற்றவில்லை. ஆனால் அவர்கள் முஸ்லிம்கள். அது ஒன்றுதான் பிஎஃப்ஐ தடைக்கான காரணம். இதில் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்தால் இந்தியா காப்பாற்றப்பட்டது என்று அமித் ஷா சொல்வதெல்லாம் நகைப்புக்குரியது என்றார்.
பிஎஃப் ஐ தடை பின்னணி:
முன்னதாக கடந்த செப்டம்பர் 2022ல் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் அல்லது முன்னணிகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல், அதற்கு நிதியளித்தல், கொடூரமாக கொலைகள் செய்தல் உள்பட நாட்டின் அரசியல் சட்ட அமைப்பை மதிக்காமல் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்த அமைப்பின் கொடிய செயல்களை கட்டுப்படுத்துவது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்து, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள், ரெஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்ஐ), அகில இந்திய இமாம்கள் கவுன்சில் (ஏஐஐசி), மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (என்சிஎச்ஆர்ஓ), தேசிய மகளிர் முன்னணி, ஜூனியர் முன்னணி, எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், கேரளாவில் உள்ள ரெஹாப் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட முன்னணிகளை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 பிரிவுகளின் கீழ் “சட்டவிரோத அமைப்புகளாக” அறிவித்துள்ளது’ என்று தெரிவித்திருந்தது.