கோவை மாநகர மேயராகும் கல்பனா ஆனந்த குமார்...! - வேலுமணியின் சொந்த வார்டில் வென்ற வெற்றிச்செல்வனுக்கு துணை மேயர் பதவி
யாரும் எதிர்பாராத வகையில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கல்பனா ஆனந்தகுமாரும், எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டில் வென்ற வெற்றி செல்வன் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியது. அதில் 73 வார்டுகளில் திமுக நேரடியாக வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் 9 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 4 வார்டுகளிலும், மதிமுக 3 வார்டுகளிலும், கொமதேக 2 வார்டுகளிலும், மமக 1 வார்டிலும் வெற்றி பெற்றது. அதிமுக 3 வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ 1 வார்டிலும் வெற்றி பெற்றது. தேர்வு செய்யப்பட்ட கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் மேயர் பதவிக்கு கல்பனா ஆனந்தகுமாரும், துணை மேயர் பதவிக்கு வெற்றி செல்வனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அப்பதவிக்கு திமுக கிழக்கு மாநகர மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, திமுக கிழக்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதியின் 22 வயது மகள் நிவேதா, முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு உள்ளிட்டோர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கல்பனா ஆனந்தகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேயர் வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார்
கோவை மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கல்பனா ஆனந்தகுமார். 40 வயதான இவர், கோவை மாநகராட்சி 19 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார், அப்பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார். எளிய குடும்ப பின்னணியை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் குடும்பத்தினர் 3 தலைமுறையாக திமுக விசுவாசிகளாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மேயர் வேட்பாளராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் மேயர் என்ற பெருமையை கல்பனா ஆனந்தகுமார் பெற உள்ளார். இதையடுத்து திமுக தொண்டர்கள் கல்பனா ஆனந்தகுமாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய கல்பனா ஆனந்தகுமார், “திமுக சார்பில் 19 வது வார்டில் போட்டியிட்டு 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக என்னை தேர்ந்தெடுத்த முதலமைச்சர், அமைச்சர் செந்தில்பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் என்னை வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மாநகராட்சியில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி, கோவை மாநகராட்சியை தமிழ்நாட்டில் முதலிடத்திற்கு கொண்டு வருவேன்” என அவர் தெரிவித்தார்.
துணை மேயர் வேட்பாளர் வெற்றி செல்வன்
கோவை பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் இரா.வெற்றி செல்வன். 51 வயதான இவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் திமுகவில் கோவை மாநகராட்சி 92 வது வட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டான 92 வது வார்டில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி செல்வன் முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் துணை மேயர் வேட்பாளராக வெற்றி செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய வெற்றி செல்வன், “எனக்கு வாக்களித்த மக்களுக்கும், வாய்ப்பு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் நன்றி. திமுகவின் அடிமட்ட தொண்டனுக்கும் பதவி தேடும் வரும் என்பதற்கு நான் எடுத்துக்காட்டு. குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிப்பேன். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வார்டில் இருந்து என்னை துணை மேயராக அறிவிக்கப்பட்டு இருப்பது இப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை மேயர் வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாய்ப்பை தேடிக் தந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நன்றி” என அவர் தெரிவித்தார்.