Avaniyapuram Jallikattu 2024: கோலாகலமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிகட்டு.. சீறி வரும் காளைகள், காளையர்கள்..!
Avaniyapuram Jallikattu 2024: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அதன்படி ஜனவரி 15 ஆம் தேதியான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்ற நிலையில், இன்று நடக்கும் போட்டியில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான டோக்கன் நேற்று வழங்கப்பட்டது. இன்று காலை மாடுகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதனையடுத்து வாடிவாசலில் இருந்து காலை 7.10 மணியளவில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகிய இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு ஊர்களிலும் இருந்து மக்கள் அவனியாபுரம் வருகை தந்துள்ளனர். இதனால் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து 1 கிலோ மீட்ட தூரம் வரை இருபக்கமும் தென்னை மர கட்டைகளால் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி வருகின்றனர்.
முன்னேற்பாடுகள்
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வாடிவாசல், பார்வையாளர் மாடம், கேலரி ஆகியவை தரமாக அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் போட்டியின் போது காயங்கள் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தென்னை நார் பரப்பி விடப்பட்டுள்ளது. மேலும் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 அரசு மருத்துமனை மற்றும் 3 தனியார் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எலும்பு முறிவை கண்டறியும் வகையில் நடமாடும் எக்ஸ்ரே வாகனமும் அவனியாபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.