Sivagangai: மருதுபாண்டியர்கள் சிலைக்கு முழக்கங்கள் எழுப்பியபடி வீர வணக்கம் செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் !
விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு மருது பாண்டியர்களின் வாரிசுதாரர் ராமசாமி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
திருப்பத்தூரில் முதல் முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மருதுபாண்டியர்கள் சிலைக்கு முழக்கங்கள் எழுப்பியபடி வீர வணக்கம் செலுத்தினர்.
தமிழ்நாட்டுக்கு என நீண்ட, பெருமை வாய்ந்த வரலாறு உள்ளது. நாட்டிலேயே மிகவும் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். இருப்பினும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் முத்திரையைப் பதித்தும், அதிகம் அறியப்படாத தமிழ் விடுதலைப் போராளிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு போதுமான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வரலாற்று ஆவணங்களில் கூட அவர்களை பற்றிய போதுமான அளவு குறிப்பிடப்படவில்லை.
சின்ன மருது, பெரிய மருது
சுதந்திர போராட்ட வரலாற்றில் மகத்தான பங்களிப்பு ஆற்றிய போதிலும், மருது பாண்டியர் சகோதரர்களான வல்ல மருது மற்றும் அவரது இளைய சகோதரர் சின்ன மருது ஆகியோர் இந்திய அளவில் அறியப்படாமல் உள்ளனர். இவர்கள் சிவகங்கை முத்து வடுகரின் தளபதிகள் ஆவர். காளையார் கோவில் போரில் சிவகங்கையின் ஆட்சியாளர் கொல்லப்பட்ட பிறகு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணைக்கு கொண்டு வர இந்த இரண்டு சகோதரர்களும் உதவினார்கள். கூடுதலாக, அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக கடும் போரை நடத்தினர். ஆங்கிலேய துருப்புக்களை துரத்தி அடித்தனர். ஆரம்ப காலனித்துவ காலத்தில் இந்தியாவில் கொரில்லா போர்முறையை நிறுவிய பெருமை, மருது சகோதரர்களை சேரும். சிவகங்கை சீமை என்ற பெயரில், இவர்களை போற்றும் வகையில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசு இவர்களை கௌரவிக்கும் வகையில் தபால் தலையையும் வெளியிட்டது. மலேசியாவின் கெடாவில் இவர்களுக்கு என ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் சின்ன மருது, பெரிய மருது
சுதந்திர போராட்டத்தின் போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன மருது, பெரிய மருது ஆகியோர் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர். இதனால் இருவரும் ஆங்கிலேயர்களால் திருப்பத்தூரில் 1801 ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்கள். இதனையடுத்து அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் திருப்பத்தூரில் அமைக்கப்பட்டு இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ம் தேதி மருதுபாண்டியர்களின் நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 28 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சியினர் இங்கு வந்து மருதுபாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தியதில்லை.
இந்த ஆண்டு வாரிசுதாரர்கள் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனையடுத்து மாலை 4 மணிக்குமேல் நினைவு மண்டபத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக வந்து முழக்கங்கள் இட்டு மலர் மாலையிட்டு வீரவணக்கம் செலுத்தினர். விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு மருது பாண்டியர்களின் வாரிசுதாரர் ராமசாமி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகரச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சின்னத்துரை, திருப்பதி, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் சந்திரன், மணமேல்பட்டி சந்திரன், சுண்ணாம்பிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, ஆசிரியர் கந்தசாமி, மல்லை முத்தமிழ், ரவி, வீரபாண்டியன், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள் படிக்க - Ayudha Pooja 2023: தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு..சாப்பிட்ட இலையை எடுத்த மண்டல குழு தலைவர் - காஞ்சியில் நெகிழ்ச்சி
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - NIA Arrest : ‘ஹோட்டல் ஊழியர் போல பதுங்கியிருந்த பயங்கரவாதி?’ தேனியில் அதிரடி கைது..!