வணிகத்துறையில் முதுகலை பட்டமா? தமிழக கூட்டுறவு தணிக்கைத்துறையில் பணிகள் காத்திருக்கு..
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்துத்தேர்வானது ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர்( Assistant Director of co – operative Audit) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் வருகின்ற பிப்ரவரி 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
கொரோனா தொற்றினால் கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித அரசுப்பணியிடங்களுக்கானத் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் போட்டித்தேர்விற்காகக் காத்திருந்த இளைஞர்கள் எப்போது தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூட்டுறவுத்துறையில் எம்காம் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என இங்கே அறிந்துகொள்வோம்.
கூட்டுறவு தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள்: 8
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் எம்.காம் ( கூட்டுறவு) மற்றும் கூட்டுறவு பிரிவில் டிப்ளமோ அல்லது ஐசிஏஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
கூட்டுறவு தணிக்கைத்துறையில் உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளப்பக்கத்திற்கு சென்று வருகின்ற பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே உங்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையத்தில் நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலமே விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு ரூ. 150 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி, பிசிஎம் உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத்தேர்வு ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை முதல் தாள் மற்றும் மதியம் இரண்டாம் தாள் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ளபடி கட்டாய தமிழ்த்தேர்வு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்:
இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 56,100 முதல் 1,77,500 லட்ச ரூபாய் வழங்கப்படவுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள இப்பணிகள் முற்றிலும் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்பதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://www.tnpsc.gov.in/Document/english/2022_02_AD_Cooperative%20Audit_Eng.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.