‛எதற்கெடுத்தாலும் விசாரணை ஆணையம்...’ ‛ரிசல்ட்’ ஜீரோ; செலவு கோடி!
விசாரணை ஆணையங்களில் இதுவரை ஒன்று கூட முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆணையம் இதுவரை விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இந்தச் சூழலில் இந்த ஆணையத்தின் விசாரணையை முடித்து வைக்க கோரி ஒரு பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இன்னும் 3 மாதங்களுக்கு விசாரணையை முடித்து அறிமுகசாமி ஆணையம் ஏன் அறிக்கையை தாக்கல் செய்ய கூடாது என்று கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். அத்துடன் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
விசாரணை ஆணையங்கள்அமைப்பது வெறும் கண் துடைப்பா?
தமிழ்நாட்டை பொறுத்தவரை விசாரணை ஆணையங்கள் அமைப்பது என்பது ஒரு கடமையாகவே இருந்து வந்துள்ளது. ஏனென்றால் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் 45க்கும் மேற்பட்ட விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வெறும் 2 அல்லது 3 ஆணையங்கள் மட்டுமே இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஆணையங்கள் அனைத்தும் வெறும் கண் துடைப்பாகவே இருந்துள்ளன.
அரசின் தரவுகள் என்ன?
2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சார்பில் ரகுபதி ஆணையத்தின் கேள்விகள் தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில் நீதிபதி எம் சுப்ரமணியன் தமிழ்நாட்டில் தற்போது விசாரணையில் உள்ள ஆணையங்கள் என்னென்ன? அதற்கு செலவு செய்யப்பட்ட நிதி எவ்வளவு? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு அப்போதைய அதிமுக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டு முதல் 5 விசாரணை ஆணையங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி சிங்காரவேலு ஆணையம் இளவரசனின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டது. நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையம் ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டது. ஓமந்தூரார் தலைமை செயலகம் கட்டிய பணியின் ஊழல் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் என மொத்தம் 5 விசாரணை ஆணையங்கள் அப்போது விசாரணையில் இருந்தன.
இந்த விசாரணை ஆணையங்களில் இதுவரை ஒன்று கூட முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக ரகுபதி ஆணையம் 2018ஆம் ஆண்டு வரை 4.11 கோடி ரூபாய் விசாரணைக்கு செலவு செய்துள்ளதாகவும் அரசு தெரிவித்தது. இதேபோல் சிங்காரவேலு ஆணையம் 2.06 கோடி ரூபாயும், ராஜேஸ்வரன் ஆணையம் 1.47 கோடி ரூபாயும், அருண ஜெகதீசன் ஆணையம் 27.75 லட்ச ரூபாயும் செலவு செய்ததாக கூறப்பட்டிருந்தது. இதை வைத்து பார்க்கும் போது விசாரணை ஆணையங்களால் அரசு கூடுதல் நிதி செலவும் உள்ளது தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த ஆணையங்களால் அரசுக்கு பெரிதாக எந்தவித பயனும் இல்லை என்றே பல சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க: கர்நாடக புதிய அணைக்கு நடுவர் மன்றம் மூலம் தீர்வு -துரை முருகன்