சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது பொருநை நாகரிகம் - தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து!
மொழிகளில் பழமையானது தமிழ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோ? அதுமாதிரி இரும்பை முதன் முதலில் கண்டறிந்தது தமிழன் என்ற வாக்கியம் உலக நாடுகளின் பாடப்புத்தகங்களில் வருவது உறுதி.
பொருநை ஆற்றில் சிவகளையில் கிடைத்த முதுமக்கள் தாழியை தொல்லியல் ஆய்வு செய்த போது சுமார் 5 ஆயிரம் வருடம் பழமையான தமிழ் மொழி என கண்டுபிடிக்கப்பட்டது" என்று சென்னையில் நடந்த 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜன் தெரிவித்தார்.
தற்போது 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7 முதல் 9ம் தேதி வரை சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசிவியல் நிறுவனத்தில் நடைபெற்று வந்தது. இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் "சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சியும் தமிழர்ளின் கலாசாரத்தில் இதன் தாக்கமும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆலோசகர் ராஜன், பேசினார். அவர் பேசும்போது தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கண்டெடுத்த முதுமக்கள் தாழியில் உள்ள உமி சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதனால் சிந்து சமவெளிக்கு இணையாக தாமிரபரணி நாகரிகள் பேசப்படும் என தெரிவித்து உள்ளார். இவரது கருத்து தொல்லியல் வரலாற்றில் மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் இயக்குனர் சுதாகர் கூறும் போது. பொருநைகரை நாகரீகத்தின் சிறப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சி பொருநை நாகரிகம் காலம் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையானது எனக் கண்டறிந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக மக்கள் இரும்பு பொருட்கள் பற்றிய நுட்பங்களை அறியவில்லை. ஆனால் பொருநை நாகரிக மக்கள் 4500 வருடத்திற்கு முன்னரே இருப்பில் ஆயுதங்கள் செய்து சிறப்பாக வாழ்ந்துள்ளனர். எனவே பொருநை கரை நாகரீகத்தினை சிந்து சமவெளிக்கு முந்தையது என கூட கூறவாய்ப்புள்ளது.இரு நாகரிக மக்களுக்கும் ஒரு தொடர்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் நம்பப் படுகிறது. காரணம் சிந்துவெளி மக்கள் பேசியது தமிழ் என்பது உண்மை என நிரூபிக்கும் காலம் மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
பொருநை ஆற்றங்கரையில் மட்டுமல்ல தமிழகமெங்கும் விழா எடுக்க வேண்டிய தருணம் இது. "உலகின் முத்தக்குடி தமிழ்குடி" என்ற வாக்கியத்திற்கான சான்றுகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த கால நிர்ணயம் தானிய வகையை வைத்துக் கண்டறியப் பட்டது. இந்த தானியம் இருந்த பானையில் இரும்பு பொருட்களும் உண்டு. அதாவது மயிலாடும் பாறையில் கண்டெடுத்த ஒரு வாள் 4200 வருடம் எனக் கண்டறிந்தனர். அது மாதிரி பொருநை கரையில் சிவகளையில் பானையில் கண்டெடுக்கப்பட்ட இரும்புப் பொருட்களும் 4500 ஆண்டுகள் பழமையானது என்றால் மிகையாகாது.
4500 வருடத்திற்கு முன் தமிழன் இரும்பு வாள் தயாரித்து பயன்படுத்தியுள்னான். அப்படி என்றால் "தமிழர்களுக்கு எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்பு இருப்பை பற்றி அறிவு இருந்திருக்கும்? "என்பது முக்கியமான கேள்வி. இதனைக் கண்டறிய முதலில் "இந்த இடத்தில்தான் இரும்பு உள்ளது?" எனத் தெரியவேண்டும். பின்னர் அங்குள்ள மண்ணை அள்ளி அதனில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க வேண்டும். அவ்வாறு பிரித்தெடுத்த இரும்பை வைத்து எந்த வகையான பொருட்களாக மற்றும் ஆயுதமாக வடித்தெடுக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும்.
இந்த வேலைகள் அனைத்தையும் முடிக்கப் பல தொழில் நுட்பம் பரிணமிக்க வேண்டும். இந்த பரிணாமத்திற்கு சுமார் 500 வருடங்களுக்கும் மேலான காலம் எடுத்திருக்கும் என்பது என் கருத்து. அதனால் தமிழர்களுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பைப் பற்றிய அறிவு மற்றும் நுட்பம் இருந்துள்ளது எனக் கொள்ளலாம்.எப்படி தற்போதுள்ள மொழிகளில் பழமையானது தமிழ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோ? அதுமாதிரி இரும்பை முதன் முதலில் கண்டறிந்தது தமிழன் என்ற வாக்கியம் உலக நாடுகளின் பாடப்புத்தகங்களில் வருவது உறுதி என்றார்.