Annamalai: “பாஜக கூட்டணியில் அதிமுக இல்லைன்னு நான் சொல்லல” - அண்ணாமலை பேச்சால் பரபரப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் கூறியதில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் கூறியதில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன கருத்து, அவரின் இறுதி முடிவாக உள்ளது. அதேசமயம் மாநில தலைவராக கூட்டணி எப்படி இருக்க வேண்டும், எப்படி போக வேண்டும் என்பதில் நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். எந்த பாதையில் போனால் அதில் பாஜகவின் வளர்ச்சி இருக்க வேண்டுமென்பது என்னுடைய எண்ணம். தலைவராக கட்சியை வளர்த்துக் கொடுத்துவிட்டு செல்வது என் எண்ணம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதனால் அமித்ஷாவின் பதிலை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் கூட்டணியின் முடிவை தலைவர்கள் ஜேபி நட்டா, அமித்ஷா போன்றவர்கள் எடுக்க வேண்டும். நான் அமித்ஷாவிடம் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தி விட்டு வந்தேன். அதை பொதுவெளியில் பேசுவது சரியாக இருக்காது. அதில் தமிழ்நாட்டில் பாஜக எப்படி செல்ல வேண்டும், தொண்டர்களின் விருப்பம் என்ன, தேர்தல் வியூகம், தமிழ்நாடு அரசியல் சூழல் போன்றவை பற்றி பேசினோம். இதில் எங்கேயும் நான் கூட்டணியில் அதிமுக இல்லை என சொல்லவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக முக்கிய கட்சியாக உள்ளது. எந்த கட்சியின் மீதும் பாஜகவுக்கு கோபம் இல்லை. நான் மாநில தலைவராக “தூய்மை அரசியல்” என்ற திட்டத்தை முன்னிலை படுத்தியுள்ளேன். 2024 ஆம் ஆண்டில் நான் தேர்தலில் நின்றால் அந்த அரசியலை நீங்கள் பார்ப்பீர்கள்.என்னால் செய்துக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பாஜக பற்றி பேசும் போது இதில் கூட்டணி பிரச்சினை எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. அமித்ஷா அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதை உறுதி செய்துவிட்டார் என செய்திகள் வெளியாகின. கூட்டணியில் இருக்கிறோம் என நான் சொல்வதை தான் அவரும் சொல்கிறார்.
இன்னும் 9 மாதங்கள் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தலை எப்படி இப்போதே முடிவு செய்ய முடியும். இரு கட்சி தலைமைகளும் பேசி முடிவுக்கு வரும் வரை இது ஓடும் நீரைப் போல தான் இருக்கும். அப்போது ஏப்ரல் 14 ஆம் தேதி அமைச்சர்களின் ஊழல் பட்டியல், ரஃபேல் வாட்ச் பில் ஆகியவை வெளியிடப்படும்” என அண்ணாமலை கூறினார்.