அரசியலில் அண்ணாமலை ஒரு சப்-ஜூனியர்: திருமாவளவன் பதிலடி
அரசியலில் அண்ணாமலை ஒரு சப்-ஜூனியர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அரசியலில் அண்ணாமலை ஒரு சப்-ஜூனியர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். முன்னதாக, பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் - புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று (ஏப்.20) நடைபெற்றது.
இதில். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தமிழகத்தில் தற்போது சலசலத்துக் கொண்டிருக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். குறிப்பாக தருமபுரம் ஆதீனத்துக்குச் சென்ற ஆளுநர் காரின் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக பேசினார்.
அப்போது அவர், "நான் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்துவிட்டு ஆளுநர் காரில் தாக்குதல் நடத்தப்படவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறட்டும். நான் ஏற்றுக் கொள்கிறேன். நாட்டிலேயே போராட்டக்காரர்களுக்கு சாலை ஓரத்திலேயே இடம் ஒதுக்கிய ஒரே முதல்வர் மு.கஸ்டாலின் தான்" என்றார்.
திருமாவுக்கு சவால்!
தொடர்ந்து பேசிய அவர், "இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது? ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாவளவன் தயாராக இருக்கிறாரா? நான் இதுவரை 2000 புத்தகங்கள் படித்துள்ளேன். அருந்ததியர் சமூகத்தில் மிகப்பெரும் தலைவரான வி.பி.துரைசாமி அம்பேத்கர் கொள்கையை பாஜக பின்பற்றுவதால்தான் பாஜகவில் இணைந்தார்" என்றும் கூறினார்.
திருமாவளவன் பதிலடி..
இதற்கு, அரசியலில் அண்ணாமலை ஒரு சப்-ஜூனியர். அவருடன் விவாதிக்க விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஒரு சப்-ஜூனியரை வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம் என திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய திருமாவளவன், "ஆளுநர் கார் சென்ற பின்னர் தான் போலீஸுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக போலீஸ் அறிக்கையில் உள்ளது. ஆனால், பாஜகவினர் ஆளுநர் கார் மீது தாக்குதல் நடந்ததாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழகம் இதுவரை மத வெறுப்புக்கு ஆளாகாத மாநிலம். தமிழகத்தை வன்முறைக் காடாக்குவதற்கு, மதவெறி தீயை பற்றவைப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது. இந்தப் போக்கு அபாயகரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடிகர் பாக்யராஜின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. எதையும் நிதானமாகப் பேசும் அவரை யார் இப்படி பேசவைத்தனர் என்பது தெரியவில்லை.
பெரியார், அம்பேத்கர் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் தான் என்றபோது மோடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. மோடியின் அக்கறை எல்லாம் அதானி, அம்பானி மீது மட்டுமே. அவர் வறுமை ஒழிப்புக்கு என்ன செய்திருக்கிறார். அதனால் அவரை விமர்சிப்பதில் என்ன தவறு. விளையாட்டில் பல்வேறு படிநிலை உண்டு. ஜூனியர், சப் ஜூனியர் என்று அழைப்பார்கள். அதுபோல் அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவருடன் விவாதிக்க விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஒரு சப்-ஜூனியரை வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம்.
இளையராஜாவை வைத்து சர்ச்சையை உண்டாகி விவாதப் பொருளாக வேண்டும் என்பது தான் சங் பரிவாரங்களில் விருப்பம். அதுதான் நடந்துள்ளது. இளையராஜா யாரை வேண்டுமானாலும் பாராட்டலாம், கொண்டாடலாம். ஆனால் நேர் எதிர் கொள்கைகள் கொண்ட இருவரை ஒப்பிட்டுப் பேசுவது முரணானது, தீங்கானது. அம்பேத்கரை வைத்து பாஜகவினர் அரசியல் செய்கின்றனர். அவர்கள் அம்பேத்கர் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்ய விரும்புகின்றனர். அதற்காக அவரது கொள்கைகளை திரிபுவாதம் செய்கின்றனர்" என்றார்.