Corona | அண்ணா பல்கலையில் 9 மாணவர்களுக்கு தொற்று: அமைச்சர், செயலாளர் நேரில் ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களில் உணவருந்தும் நேரங்களில் ஒட்டுமொத்தமாக மாணவர்களை அமர வைத்து ஒரே நேரத்தில் உணவு பரிமாறுவதால் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
![Corona | அண்ணா பல்கலையில் 9 மாணவர்களுக்கு தொற்று: அமைச்சர், செயலாளர் நேரில் ஆய்வு Anna University students confirmed with covid 19 Corona | அண்ணா பல்கலையில் 9 மாணவர்களுக்கு தொற்று: அமைச்சர், செயலாளர் நேரில் ஆய்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/11/12d7a557ca292a06c5809eb3bd024743_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு திறக்கப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் வட கிழக்குப் பருவ மழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதனையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஒரு மாணவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விடுதியில் இருந்த 300 மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இருவரும் பேசியதாவது:
’’தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து விடுதி வளாகத்தில் கூடுதலாக உள்ள 200 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், தங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி உணவு அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். தனிமனித இடைவெளிவிட்டு, மாணவர்கள் உணவருந்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களில் உணவருந்தும் நேரங்களில் ஒட்டுமொத்தமாக மாணவர்களை அமர வைத்து ஒரே நேரத்தில் உணவு பரிமாறுவது மற்றும் மாணவர்கள் உணவருந்துவது என்ற நிலையில் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால் உணவருந்தும் நேரத்தை மாற்றியமைப்பது அல்லது அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்’’.
இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)