அன்புமணி இராமதாஸ் அறிவிப்பு: 2026 தேர்தல் களம்! விருப்ப மனுக்கள் பெறும் தேதி அறிவிப்பு!
தமிழ்நாடு, புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் திசம்பர் 14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் - பாமக தலைவர் அன்புமணி

தமிழ்நாடு, புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் திசம்பர் 14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.
வருகிற 2026-ல் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தல் காலம் நெருங்குவதால் வருகிற ஜனவரி இறுதிக்குள் அனைத்துக் கட்சிகளும் தங்களது கூட்டணியை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூகம் வகுப்பது, தொகுதிவாரியாக கட்சியை பலப்படுத்துவது போன்ற பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன.
இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்.,
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 14.12.2025 ஞாயிற்றுக் கிழமை முதல் 20.12.2025 சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான திசம்பர் 20&ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுத் தேர்தல்களில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியக் காரணியாகக் கூட்டணி அமைப்பது உள்ளது. தேர்தல் காலம் நெருங்குவதால், பிரதான அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமான மற்றும் வலுவான கூட்டணியை அமைப்பதில் மும்முரமாக உள்ளன. வருகிற ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்துக் கட்சிகளும் தாங்கள் அமைக்கும் மெகா கூட்டணியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது





















