கவனம் பெறும் அன்புமணி மகள்கள்.. அழைத்துப் பாராட்டிய அப்பா... நிர்வாகிகள் ரியாக்சன் என்ன ?
வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணியின் மகள்களின் ஈடுபாடு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வன்னியர் சங்கம் சார்பில், மகாபலிபுரத்தில் கடந்த 11ம் தேதி வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக மாநாட்டு குழு தலைவராக, அன்புமணி ராமதாஸ் மாநாட்டிற்கான பணிகளை மேற்கொண்டார். மாநாட்டிற்கான நிர்வாகிகளை நியமிப்பது, முதல் அனைத்து பணிகளையும் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாக பாமக அறிவித்துள்ளது. தொடர்ந்து இன்று திருப்போரூர் பகுதியில், மாநாட்டிற்காக பணி செய்த வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகளுக்கு அறுசுவை விருந்து மற்றும் அசைவ விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோன்று சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸின் மகள்கள் கலந்து கொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
மாநாட்டில் கவனம் பெற்ற அன்புமணி மகள்கள்
வன்னியர் சங்க மாநாட்டில் பந்தகால் நிகழ்ச்சியின்போது, அன்புமணி முதல் மகள் சம்யுக்தா கலந்து கொண்டது, கட்சியினர் இடையே கவனத்தைப் பெற்று இருந்தது. அப்போதே அன்புமணி கட்சி நிர்வாகிகளுக்கு, மாநாட்டுப் பணிகளுக்கு மகள்களை பயன்படுத்தப் போகிறார் என்ற தகவலையும் மறைமுகமாக கட்சியினருக்கு அறிவித்திருந்தார். இந்தநிலையில் மாநாட்டு பணிகளின் போதும் மற்றும் மாநாட்டின் போதும் அன்புமணி மகள்கள் பரபரப்பாக பணியாற்றியது கட்சியினர் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.
இதுகுறித்து பாமக நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு பேசியபோது: 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெற்றதால், புதிய விஷயங்களை மாநாட்டில் சேர்க்க வேண்டும் என அன்புமணி ஆசைப்பட்டார். இதற்காக இளம் தலைமுறையினரின் ஆலோசனைகளை பெற அன்புமணி, தனது மகள்களின் யோசனைகளையும் கேட்டறிந்தார்.
மகள்களுக்கு வாய்ப்பு கொடுத்த அன்புமணி
ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில், மகள்கள் செய்த பிரச்சாரம் தமிழக அளவில் பேசப்பட்டது. எனவே மீண்டும் மகள்களுக்கு அன்புமணி ஒரு வாய்ப்பைக் கொடுக்க முடிவு செய்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து கூறுகையில், நாங்களும் எங்கள் மாநாட்டில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட சிறப்பாக சில விஷயங்கள் வந்திருந்தது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ட்ரோன் ஷோ, AI பாடல்கள், பேராக் கிளைடரில் பறந்த கொடி ஆகியவை மிகவும் பிடித்திருந்தது. இதற்கான யோசனைகள் மற்றும் முன்னெடுப்புகளை அன்புமணி மகள்கள் செய்துள்ளனர். இதுபோன்ற புதுவிதமான முயற்சிகள் எங்களது இளைஞர்களையும் பெரும் அளவில் கவர்ந்திருக்கிறது. தொடர்ந்து இது போன்ற டெக்னிக்கிலான விஷயங்களை, அன்புமணியின் மகள்கள் பார்த்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
வன்னியர் சங்க மாநாட்டில் அனைத்து வேலைகளையும் மேற்கொண்ட அன்புமணியை மருத்துவர் ராமதாஸ் பாராட்டவில்லை, அவர்கள் இருவருக்கும் மோதல் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பேத்திகளை மருத்துவர் ராமதாஸ் பாராட்டுவார் என எதிர்பார்த்தோம், ஆனால் அவர்களையும் பாராட்டாமல் ராமதாஸ் சென்றதும் மனதிற்கு வேதனையை தருகிறது என நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.





















