தஞ்சையில் மனு வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் - காரை மறித்து கதறி அழுத பெண்ணால் பரபரப்பு
எங்களுக்கு சொந்தமான நிலத்தை, எனது கணவரின் சகோதரர் அபகரித்துக்கொண்டு தர மறுப்பதாக புகார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக மக்களைத் தேடி முதல்வர் திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.தஞ்சாவூர் தொகுதியில் தஞ்சாவூர், வல்லம், நாஞ்சிக்கோட்டையிலும், திருவையாறு தொகுதியில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு இடங்களிலும் நூற்றுக்கணக்கனோர் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இதில் அரசு கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.
பின்னர் அமைச்சர் வெளியே வந்த போது, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுாக திருநல்லூரை சேர்ந்த இந்திரா என்பவர் அமைச்சரின் காரின் முன்பகுதியில் படுத்தவாறு தலையால் முட்டினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை பிடித்தனர். இருப்பினும் அந்த பெண், காரில் தேசிய கொடி இருந்த கம்பியை பிடித்துக்கொண்டு விட மறுத்தார்.இதையடுத்து அமைச்சர் அங்கு வந்த, அந்த பெண்ணிடம் கோரிக்கையை கேட்டறிந்தார். பின்னர் அந்த பெண் தான் வைத்திருந்த மனுவை அவரிடம் அளித்தார். அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு சென்றார்.
பின்னர் இந்திரா கூறுகையில், எனது கணவர் இறந்து விட்டார். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் எங்களுக்கு சொந்தமான நிலத்தை, எனது கணவரின் சகோதரர் அபகரித்துக்கொண்டு தர மறுக்கிறார். எங்களுக்கு சொந்தமான மனையில் உள்ள வீட்டை சரி செய்ய சென்ற எனது மகன் மீது பாப்பாநாடு போலீசில் பொய் புகாரினை அளித்தனர். எனது மகன் நேரில் சென்று விளக்கம் அளித்த பின்னர் போலீஸார் வழக்குப்பதிவு செய்யவில்லை. மேலும் என்னையும் தாக்கினர். இதனால் நான் தஞ்சாவூர் கூலி வேலை செய்து வசித்து வருகிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இதுவரை பணி வழங்கப்படாமல் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் நிலை குறித்தும், பகுதிநேர ஆசிரியர்கள் குறித்தும் ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம். கண்டிப்பாக இது துறை ரீதியாக கொண்டு செல்லப்பட்டு முதன்மைச் செயலாளரிடம் விவாதிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்த பேசி, இதை எப்படி சீர் செய்வது என்பது குறித்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். கொரோனா காலகட்டத்தில் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் பெற்றோர்களிடம் கல்வி நிறுவனங்கள், கல்வி கட்டணத்தை செலுத்தும் படி தனியார் கல்வி நிறுவனங்கள் நெருக்கடி அளிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம், இதைவிட சமூகத்துத்கு உதவுங்கள் என வேண்டுகோளாகவே வைத்துள்ளோம். தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் பெற்றோர்களை கல்வி தொகை கேட்டு நெருக்கடி தரக் கூடாது என்பது எங்களுடைய கருத்து.
தமிழக முதல்வர் திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை 5,438 குழுக்களுக்கு 175.74 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக 500 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி நடக்கும் ஒவ்வொரு தொகுதியாக சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம். 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மனுக்கள் வரை வரக்கூடும் என எதிர்பார்க்கிறோம். இல்லம் தேடி கல்வி திட்டம் ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படும். மத்திய அரசின் தேசிய திறனறித் தேர்வு போட்டிக்கான புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இது நல்ல விசயம், இது தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு தேவை என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.