(Source: ECI/ABP News/ABP Majha)
Governor RN Ravi: சென்னைக்கு வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு! பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி!
சென்னைக்கு வெள்ள நிவாரண நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பெருமழை பெய்தது. இப்புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. தமிழ்நாட்டில் மிக்ஜாம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் பாதிப்பு:
சென்னையில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள் தண்ணீர் சூழ்ந்திருந்ததால் படகுகளில் பயணித்தனர். மீட்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மக்கள் மழை பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர்.
இதனிடையே பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அக்கடிதத்தில், "தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய 'மிக்ஜாம்' புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும்" என கேட்டிருந்தார். இந்த கடிதத்தை இன்று பிரதமர் மோடியிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு நேரில் வழங்கினார்.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக ரூ.450 கோடியும் ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
சென்னைக்கு வெள்ள நிவாரண நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமையை மோடி கண்காணித்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 7, 2023
மேலும் படிக்க
Rajnath Singh: மோடிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்: உறுதி அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்!