அதிமுக பொதுச்செயலாளர் கல்வெட்டு விவகாரம்.. சசிகலா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த அதிமுக!
அஇஅதிமுக பொதுச் செயலாளர் என்று கல்வெட்டு திறந்ததற்காக சசிகலா மீது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அதிமுகவினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் என்று கல்வெட்டு திறந்ததற்காக சசிகலா மீது அதிமுகவினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். சசிகலாவின் இந்த செயல் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சியாகப் பதவியேற்ற பின், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா தனது தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்த ஆடியோக்கள் வெளியிடப்பட்டன. தேர்தலுக்கு முன்பு, அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்த சசிகலா இவ்வாறு ஆடியோக்கள் வெளியிடுவதன் பின்னணியில் அதிமுகவைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 16 அன்று, அதிமுகவின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு, சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். மேலும், அதிமுகவைக் கைப்பற்றும் தனது எண்ணத்தைத் தனது தொண்டர்களிடம் வெளிப்படுத்திய சசிகலாவுக்கு, அவரது தி நகர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை அவரது தொண்டர்கள் வழிநெடுக வரவேற்பு அளித்தனர். மேலும், சசிகலா இந்தப் பயணத்திற்கு ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் அதிமுக கொடியைக் கட்டியவாறு பயன்படுத்தி இருந்ததும் அதிமுகவின் மூத்த புள்ளிகளைக் கோபமூட்டியுள்ளது.
இதுகுறித்து அப்போது பேசிய அமைச்சர் ஜெயகுமார், சசிகலா அதிமுகவிற்குள் நுழைவதை ஏற்க முடியாது எனவும், அவரது செயல்பாடுகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம் எனவும், அவர் வேண்டுமானால் அமமுகவின் தலைமைப் பொறுப்புகளில் இருந்து கொள்ளலாம் எனவும் சசிகலாவின் அரசியல் வருகை குறித்து தனது கடுமையான எதிர்ப்புகளைப் பகிர்ந்திருந்தார்.
கடந்த அக்டோபர் 17 அன்று, அதிமுகவின் பொன் விழா ஆண்டுக் கொண்டாட்டங்களைக் கடைப்பிடிப்பதற்காக சென்னை தி நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்திலும், ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்திலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் சசிகலா. அப்போது சென்னை தி நகரிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கல்வெட்டு ஒன்று, சசிகலா தரப்பால் வைக்கப்பட்டது. அதில் சசிகலாவின் பெயர் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது அதிமுகவினருக்கு அதிருப்தியை உருவாக்கியது.
ஏற்கனவே அதிமுகவின் கொடியைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், சசிகலா மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலாவின் பெயரை அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டதை எதிர்த்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சசிகலாவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.