Gokula Indira : ”ஏன் என் பெயரை போடல ? பதவி போய்டும்னு பயமா?” ஆவேசமான கோகுல இந்திரா..!
முக்கிய பெண் நிர்வாகிகளில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திராவே உட்கட்சி பூசலில் ஆவேசம் அடைந்து பேசியிருக்கும் நிலையில், மற்றவர்களுக்கும் உட்கட்சி பூசல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு புகார்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தலுக்கான வேலையை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாவை புறக்கணித்த நிலையில், முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திராவும் தன் பங்கிற்கு தனது ஆத்திரத்தை நிர்வாகிகள் மத்தியில் கொட்டித் தீர்த்திருப்பது அதிமுக உட்கட்சி பூசல் வெடிக்கத் தொடங்கியிருப்பதை பட்டவர்த்தமான காட்டியுள்ளது.
கோகுல இந்திரா கோபம்
சென்னையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற கோகுலா இந்திரா, பேனர்களிலும் நோட்டீஸ்களிலும் தன்னுடைய பெயரும் புகைப்படம் போடப்படவில்லை என்பதை ஆத்திரம் பொங்க பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் கோகுல இந்திரா ‘ இந்த கூட்டத்திற்கு ஏன் வரவில்லை என்று வட்டச் செயலாளரோ, பகுதி செயலாளரோ உள்ளிட்ட யாருமே என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நான் என்ன மெஜெச் கொடுக்கும் அளவிலா கட்சியில் இருக்கிறேன்?, பலர் என்னை பார்த்து வணக்கம் செய்ய பயப்படுகிறார்கள், சிலர் என்னுடைய பெயரை பேனரில் போடவும், என்னுடைய புகைப்படத்தை கட்சி நிகழ்ச்சியில் பயன்படுத்தவுமே பயப்படுகிறார்கள், இதை தவிர்க்க வேண்டும். யார் வேண்டுமெனாலும் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ வேட்பாளராக வரலாம், யாரை வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யலாம், தென் சென்னை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பிறகு பலர் என்னை அழைத்து பேசினார். ஆனால், என்னால் மத்திய சென்னை தொகுதி உள்ளிட்ட எங்கும் எந்தழ் பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக ரொம்ப டீசண்டா ஒதுங்கிட்டேன். நான் யாரையும் தொந்தரவு செய்வதில்லை, நான் குருப்பிசம் செய்வதும் இல்லை. மாவட்ட செயலாளருக்கு நானே தொலைப்பேசியில் அழைத்து பேசினேன். நான் கேட்பது அடிப்படை மரியாதைதான் வேறு எதுவும் இல்லை. என் பெயரை போடாமல் தவிர்க்க வட்டச் செயலாளருக்கு என்ன நிர்பந்தம் ? ஏன் என் புகைப்படம் போடவில்லை?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை மூத்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா உள்ளிட்டோர் முன்னிலையிலேயே கோகுலா இந்திரா முன் வைத்தது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயக்குமார் விளக்கம்
இது குறித்து அதிமுக மூத்த தலைவரும் அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் இன்று எடப்பாடி பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பிறகு விளக்கம் கொடுத்தார். அப்போது, அவர் கோகுலா இந்திராவிற்கு ஏதேனும் மன குறை இருந்தால் அதனை நேரடியாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கலாம் என்று பேட்டி அளித்திருக்கிறார்.
களேபரமாகும் கள ஆய்வுகள்
தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தயார் படுத்தும் விதமாக ‘கள ஆய்வு’ குழுவை நியமித்து மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்ட நிலையில், கள ஆய்வில் இடம் பெற்றுள்ள மூத்த நிர்வாகிகள் செல்லும் மாவட்டங்களில் எல்லாம் அவர்கள் முன்னிலையியே நிர்வாகிகளுக்கு மத்தியில் வாக்குவாதங்கள் நடைபெறும், தள்ளுமுள்ளு தொடங்கி கைக்கலப்பு வரை நடைபெற்று நாற்காலிகள் தூக்கி வீசப்படுவதுமாக இருந்த நிலையில், தற்காலிகமாக கள ஆய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தென் சென்னையில் மீண்டும் தொடங்கிய கள ஆய்வு நிகழ்ச்சியில்தான் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கிய பெண் நிர்வாகிகளில் ஒருவருமான கோகுல இந்திராவே தன்னுடைய மனக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

