AIADMK; கட்சி யாருக்கு? அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!
AIADMK; அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
AIADMK: அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் முடிவு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வரும் என கூறப்படுகிறது.
சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்கிய பின்னர், அதிமுகவானது ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது. இதில் இபிஎஸ் தரப்பு கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த பொதுகுழு நடந்து கொண்டு இருக்கையில் ஓபிஎஸ் தரப்பினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களைக் கைப்பற்றினர். இதனால் பெரும் அரசியல் பதற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டது. அதன் பின்னர் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் முதலில் பொதுக்குழு செல்லாது எனவும், அதன் பின்னர் செல்லும் என இரு வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. டிசம்பர் 6-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகள் மீது தேர்தல் ஆணையம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப்பணிகளை சீராகச் செய்யமுடியவில்லை, எனவே தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையத்தினை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க முடியாது என ஒபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வருவதால், முடிவு இபிஎஸ்ஸுக்கு சாதகமாக வரும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக,
ஓபிஎஸ் தரப்பு:
இந்த வழக்கின் தொடக்கத்தில், அதிமுக-வின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்தான் நியமிக்க முடியும் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், ஆனால் அது கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்த விசாரணை வரும் வரை, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இபிஎஸ் தரப்பு:
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் எனவும் இபிஎஸ் தரப்பும் உத்தரவாதம் அளித்துள்ளது.
ஆவணங்களை சமர்ப்பித்த இபிஎஸ் தரப்பு:
அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் தேர்வு செய்துள்ளதாக 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள், தங்களது ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்கியிருந்தனர். இந்நிலையில் வழங்கப்பட்ட கடிதங்களை, தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் தரப்பு சமர்பித்தது.
டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம், உறுப்பினர்களின் கடிதங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பின் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் சமர்ப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் தங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பிக்க கோரும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தடையையும் உச்சநீதிமன்றம் நீட்டித்திருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டுதான் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் இருக்கப்போகிறது என்பதால் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.