என்ன ஆகப்போகிறது ஓபிஎஸின் அரசியல் வாழ்க்கை...?அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு..!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. நீதிபதி குமரேஷ் பாபு, காலை 10:30 மணிக்கு தீர்ப்பினை வழங்குகிறார்.
நாளை தீர்ப்பு:
அனைத்து தர்ப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தீர்ப்பு தேதி வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் பல்வேறு விதிகள் திருத்தப்பட்டன. அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். இந்த விதிக்கு எதிராகதான் தற்போது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஓபிஎஸ் தரப்பு வாதம்:
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு மாலையிலேயே சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பழனிசாமி மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் மட்டுமின்றி நீதிமன்றத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் என குற்றம் சாட்டியுள்ளனர். கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும் பொதுச்செயலாளர் தேர்தல் விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் போட்டியிட விரும்புவோரை சட்டவிரோதமாக தடுத்துள்ளனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ள ஓபிஎஸ், "எதுவுமே முறைப்படி இல்லாமல் பிக் பாக்கெட் அடிப்பது போல இருக்கிறது அவர்களது செயல்பாடுகள். இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் பொதுக்குழுவை அங்கீகரிக்க வில்லை.
மக்களும் தொண்டர்களும் இவர்கள் மீது நம்பிக்கை வைத்து இருந்திருந்தால் ஈரோடு கிழக்கு தேர்தலில் வென்றிருக்க வேண்டும். 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கழகத்தை தோல்வி பெற செய்தவர் எடப்பாடி. அடிப்படை மக்கள் தலைவர்கள்தாம் என்ற கட்சி விதியை மாற்றி மிட்டாதார் மிராசுதார் போல தன்னை சுற்றி உள்ளவர்கள் மட்டும் தலைமை பொறுப்புக்கு வரும் வகையில் விதிகளை மாற்றி உள்ளனர்" என தெரிவித்திருந்தார்.
இபிஎஸ்-க்கு நெருக்க தர முயற்சி:
அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மோதல் உச்சத்திற்கு சென்ற நிலையில், பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தது முதல் இ.பி.எஸ். தரப்பினர் பழனிசாமியை பொதுச்செயலாளராக ஆக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேசமயம், இடைத்தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தோல்விகள் காரணமாகவும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் தரப்பினரின் வியூகம் காரணமாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.