EPS Delhi: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று டெல்லி பயணம்: திட்டம் இதுதான்!
வரும் திங்கள்கிழமை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இபிஎஸின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக, மாநிலத்திற்கு மாநிலம் தனித்தனியே வியூகம் அமைத்து, தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்று பெறுவதற்கு உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களே காரணம். மேல்குறிப்பிட்ட இந்த மாநிலங்களில், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் பாஜகவே வெற்றிபெற்றது. ஆனால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎஸ்-க்கு முக்கியத்துவம் அளித்து வரும் பாஜக தேசிய தலைமை:
எனவே, இந்த மாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென் மாநிலங்களில் சரிகட்ட பாஜக முயற்சித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் வெற்றிபெற பாஜக முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை 18ஆம் தேதி, டெல்லியில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் (தேசிய ஜனநாயக கூட்டணி) கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு அருகே எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை அளிக்கப்பட்டது. கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வழிமொழிந்து பேசியது என அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில், இன்று டெல்லிக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வரும் திங்கள்கிழமை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இபிஎஸின் அடுத்த திட்டம்:
ஆனால், இந்த சந்திப்பை அதிமுக தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை. அதேபோல, மறுக்கவும் இல்லை. இருப்பினும், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை, நேற்று டெல்லி புறப்பட்டு சென்றது பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. பாஜக கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பது மட்டும் இன்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரவை பழனிசாமி சந்திக்க உள்ளதாக அதிமுக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததில் இருந்தே, மாநில பாஜகவுக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே தொடர் மோதல் போக்கு இருந்து வருகிறது. ஆனால், வரவருக்கும் மக்களவை தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியை தொடர்வதில் பாஜக தேசிய தலைமை முனைப்பு காட்டி வருகிறது.
அதே சமயம், பழனிசாமியுடன் நெருக்கம் காட்டி வரும் பாஜக தேசிய தலைமை, அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், அதிமுக முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா ஆகியோரிடம் இருந்து தள்ளி நிற்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: Priya raman: ரஜினிக்காக பாரதிராஜா தாரைவார்த்த ஹீரோயின்... ஒரே படத்தில் காணாமல் போன பிரியா ராமன்...